கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா முதன்மை வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் நடிகை ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற திரைப்படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று(மார்ச் 3) மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.
Thank you for this! ☺️???? https://t.co/nFr5WdXu6d
— ReginaCassandra (@ReginaCassandra) March 3, 2020
அந்தப் போஸ்டரில், இளவரசி போன்ற வேடத்தில் முகத்தில் காயங்களுடன் ரெஜினா கோபமாகக் காட்சியளிக்கிறார். இந்தப்படத்திற்கு **சூர்ப்பனகை** என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்றுக் கதாபாத்திரத்தை நினைவூட்டும் இந்தப் பெயரும், ரெஜினாவின் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இராமாயண கதையில் இராவணனின் தங்கையாக வரும் ‘சூர்ப்பனகை’ அரக்க குடும்பத்தில் பிறந்த அழகுபெண் என்று விளக்கப்படுகிறார். இராமனை காதலித்து வரும் அவர், சீதையைக் கொலை செய்ய முற்படும்போது இராமனின் சகோதரன் இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கு, காது மற்றும் மார்பகங்களை வெட்டித் துரத்திவிடுவார் என்றும், அதனால் கோபம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க முற்படுவார் என்பதுமாக இராமாயணக் கதை அமைந்துள்ளது.
அந்த கதாபாத்திரத்தின் பெயர் திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாலும், டைட்டில் மற்றும் ரெஜினாவின் முகத்தில் ரத்தம் தெறிப்பதாக போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளதாலும் இராமாயணக் கதையைப் போன்ற பழிவாங்கல் கதையாக இந்தத் திரைப்படம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் இந்தப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘நீனா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”