தமிழக இளைஞர்களைப் பற்றி பேசும் ரெட் சாண்டில்!

Published On:

| By Balaji

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது ஆந்திர காடுகளில் நடக்கும் செம்மரக் கடத்தல் தொடர்பான கதையைக் கொண்டது.

இந்த நிலையில் இதே போன்ற கதை களத்துடன் உருவாகி வரும் படத்துக்கு ரெட் சாண்டில் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் நாயகனாக வெற்றி நடித்து வருகிறார். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார். வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்கள்.

குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது… மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. அப்படி ஒரு வலுவான கதைக் களத்தோடு உருவாகும் இந்தப் படம், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகிறது.

2015இல் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு. உண்மையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இந்தத் தொழிலில் ஈடுபட வைக்கிறார்கள்.

கதை ஆந்திர மாநிலம் ரேணிக்குண்டாவில் நடக்கிறது. செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையைப் பற்றி சொல்லும் இந்தப் படம் கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகியுள்ளது. சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஜே.ஆர் சினிமா நிறுவனம் தயாரிக்கிறது என்றார்.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share