]சிஎஸ்கே: தோனி விலகல்… உண்மை காரணம்?

entertainment

ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வந்த நிலையில், நாளை (மார்ச் 26) தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் அவருக்குப் பதிலாக அணியின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்கவுள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2022 – டி20 ஆட்டங்கள் நாளை (மார்ச் 26) தொடங்கவிருக்கும் நிலையில் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க முடிவெடுத்ததுடன், அவரே ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் பொறுப்புக்குத் தேர்வு செய்துள்ளார். 2012 முதல் சென்னை அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சென்னை அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரராக இருப்பார். அதேநேரம் இந்த சீசனிலும் அதற்கு பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னதாக, சில மணி நேரம் முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தோனி ஒருசில ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிவு செய்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா ஏற்கத் தயாராக இருப்பார்.
கடந்த சில ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா ஒரு வீரராக முதிர்ச்சியடைந்த விதம் மற்றும் சூழ்நிலைகளை சமாளிக்கும் விதம் அருமையாக மேம்பட்டுள்ளது. எனவே, தோனி ஓய்வு எடுக்க முடிவு செய்து, கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று தெரிவித்தார். அதன்படி, அவர் பேசிய சில மணி நேரத்தில் கேப்டன் மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2008 முதல் மகேந்திரசிங் தோனி சிஎஸ்கேவுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். சிறந்த கேப்டனாகச் செயல்பட்டுவந்த தோனி ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர். இவர் தலைமையில் சிஎஸ்கே அணி 115 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 என மொத்தம் நான்கு ஐபிஎல் போட்டியில் கப் அடித்து வெற்றி வாகை சூடியது.
அதுமட்டுமில்லாமல் தோனி மொத்தம் 220 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 4746 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக, கடைசி ஓவர்களில் மட்டும் 50 சிக்ஸர்களை அடித்து, கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
2020-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக ஓய்வுபெற்ற தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கேப்டனாக விளையாடி வந்தார். தற்போது அவருக்கு நாற்பது வயதாகிவிட்ட நிலையில் இந்த சீசனோடு ஓய்வு பெறவும் வாய்ப்புள்ளது.
எனவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவரது கேப்டன்சியை கடைசியாக காணலாம் என ரசிகர்கள் காத்திருக்க தற்போது தனது கேப்டன்சியை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். தோனியின் இந்த முடிவு சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனை உருவாக்குவதற்காக இருந்தாலும், தோனியின் கேப்டன்சியைப் பார்க்கக் காத்திருந்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி இருப்பதால், கோப்பையை வெல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.