`பேயின் ஒலியா? மனிதனின் வலியா?: ரீ கதை!

Published On:

| By admin

வணிக மயமாகி போய்விட்ட வாழ்க்கை சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது. உலகத் தொடர்புகள் மிகவிரைவில் சாத்தியமாகிறது. ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.

ஆனால் ‘ரீ ‘ படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.
என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?என்று அறிய முற்படுகிறாள்.

ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது. அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் ‘ ரீ’.

இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார் .அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்க்ஷன்ஸ்
சார்பில் தயாரித்துள்ளார். சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இயக்குநர் சுந்தரவடிவேல் மதுரையைச் சேர்ந்தவர். திரையுலகின் கள அனுபவம் வேண்டி ‘சண்டி முனி’ படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

‘வலியோர் சிலர்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பரவலாகத் திரையுலக அனுபவம் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட அவர் உருவாக்கியிருக்கும் படம் தான் ரீ. இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம். இப்படத்தில் ‘ ஹர ஹரமகாதேவி படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார்.ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் பிரசாத் சங்கீதா பால், மணி சங்கர் ,சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரையும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின பெரும்பகுதி இரண்டு வீட்டில் நடக்கும் படி உருவாகியுள்ளது என்கிறார் இயக்குநர் சுந்தரவடிவேல்.

**-அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share