நடிகை ராஷி கண்ணா கூறியதாக பரவி வரும் கருத்துகளுக்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. கடந்த 2018ம் ஆண்டு தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் அறிமுகமானார். ’துக்ளக் தர்பார்’, ‘அரண்மனை3’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கைவசம் தற்போது தமிழில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’, ‘மேதாவி’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இது தவிர தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ராஷி கண்ணா அஜய் தேவ்கனுடன் நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தான் குண்டாக இருந்ததால் புறக்கணிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு உடல் எடை குறைத்ததாகவும் பகிர்ந்திருந்தார்.
மேலும், அந்த சந்திப்பில் ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாக்கள் பெண் உடலை கவர்ச்சியாக காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என பேசினார் எனவும் கருத்து பரவி வருகிறது.
இந்த கருத்துக்கு ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘தென்னிந்திய படங்கள் குறித்து நான் பேசியதாக சில புனையப்பட்ட தவறான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதை பரப்புவது யாராக இருந்தாலும் சரி. என்னை பற்றி தவறாக இப்படி பரப்புவதை நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்கிறேன். தென்னிந்திய படங்கள் ஒவ்வொன்றின் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். எல்லாரும் அன்பாக இருப்போம்’ என அதில் தெரிவித்துள்ளார்.
**ஆதிரா**