புதுமையான கதைகளைத் திரையில் படமாக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராம். 2007ஆம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அடுத்து தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.
அதிக படங்களைக் கொடுக்க வேண்டும் என நினைக்காமல், தனித்துவமான ஒரு படத்தைக் கொடுத்தால் போதும் என நினைப்பவர் ராம். அடுத்த கட்டமாக இரண்டு நடிகர்களுக்கு படம் இயக்கும் பணிகளில் இருக்கிறார்.
சிம்பு நடிப்பில் ராம் இயக்க ஒரு படம் உருவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான கதையை சிம்புவிடம் சொல்லிவிட்டார் ராம். விரைவிலேயே இந்தப் படம் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ராம். சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். சுரேஷ் காமாட்சியின் முன்னெடுப்பினால்தான் நிவின்பாலி – ராம் கூட்டணி இணைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஏன் நிவின்பாலி… தமிழில் நடிகர்களே இல்லையா என்று விசாரித்தேன். ராம் இயக்கிய பேரன்பு படத்துக்கு தமிழை விட மலையாளத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் மம்மூட்டியை இப்படி யாரும் நடிக்க வைக்கவில்லை என சிலாகித்தார்கள் கேரள ரசிகர்கள். பேரன்பு படத்தையும் கொண்டாடித் தீர்த்தார்கள். அதனால், மீண்டும் ஒரு மலையாள நடிகரையே தேர்ந்தெடுக்கலாம், அவர் தமிழிலும் பிரபலமான நடிகராக இருக்க வேண்டும் என யோசித்து நிவின்பாலியை டிக் செய்திருக்கிறார்களாம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாக இருக்காம். எப்படியும், ராமுக்கு முதலில் இந்தப் படம் தொடங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.
**-ஆதினி**�,