அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
[100 கோடி ரூபாய் சம்பளம் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார் என்று ஏற்கனவே எழுதியிருந்தோம்.](https://minnambalam.com/entertainment/2021/11/10/28/Rajini-family-100-crore-dream) அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று செய்திகள் உலாவினாலும் சம்பளம் கட்டுபடியாகவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவுக்கு வராமல் தடுமாறுகிறது என்கிற செய்திகளும் வெளியானது.
இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவாகவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடுவே பீஸ்ட் படத்தை இயக்கும் நெல்சன் திலிப்குமார் பெயரும் அடிபடுகிறது.
இயக்குநர் யாராக இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி என்பதோடு அண்ணாத்த படத்தின் வசூல் அடிப்படையில் ரஜினிகாந்த் சம்பளத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆம் அண்ணாத்த படத்துக்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த், தற்போது 70 கோடி ரூபாய் என்று சன் பிக்சர்ஸ் நிர்ணயம் செய்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் என சன் பிக்சர்ஸ் வட்டாரம் கூறுகிறது.
படம் ஓடுகிறதோ இல்லையோ படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் கோடம்பாக்க கதாநாயகர்களுக்கு மத்தியில் நூறு கோடி ரூபாய் வாங்கிய நிறுவனத்தில் அடுத்த படத்திலேயே தன் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருப்பது எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் அண்ணாத்த படத்தின் வசூல் பற்றி ஊடகங்களில் வெளியான மிகையான செய்திகளின் உண்மைத் தன்மை பற்றிய விவாதம் எழுந்துள்ளது.
**-இராமானுஜம்**
�,