தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக 30 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருகிறார். ரஜினியின் 169ஆவது படமாக ‘அண்ணாத்த’ தயாராகி வருகிறது. ஹீரோவாக ரஜினி எப்படியோ, அப்படி காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் அது கவுண்டமணிதான். ரஜினி – கவுண்டமணிக்குமான நட்பு குறித்த ஒரு சுவாரஸ்யமான நாஸ்டாலஜிக் கதைதான் இது.
ரஜினி, கவுண்டமணி இருவருமே பெரிய ஸ்டாராக மாறாத நேரம். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். அந்தக் காலகட்டத்தில் உச்ச நடிகர்களுக்கு மட்டுமே ஏகபோக கவனிப்பு இருக்கும். படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பவர்களுக்கு மட்டுமே பிக்கப் கார் வருவது, தங்குவது என சகல கவனிப்பும் அக்கறையோடு நடக்கும். கமல்ஹாசன் அப்போது மிகப் பெரிய ஸ்டார்.
இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட நடிகர்களுக்கு கார் வருவதும், படப்பிடிப்பு முடிந்து, கொண்டு சென்று விடுவதும் தாமதமாகத்தான் இருக்கும். நடிகர்கள் யூனிட்டுக்காகக் காத்திருக்க வேண்டும். அப்படி, காத்திருப்பது கவுண்டமணிக்குப் பிடிக்காது. சில நேரங்களில் நடந்தே வீட்டுக்கும் சென்றுவிடுவாராம் கவுண்டமணி.
அப்படியான ஒரு நாளில், ரஜினி சக நடிகர்களுடன் காரில் போய்க்கொண்டிருக்கிறார். அப்போது, கவுண்டமணி படப்பிடிப்பு முடிந்து வடபழனியிலிருந்து அவர் தங்கியிருந்த ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு நடந்தே சென்று கொண்டிருந்தார். ரஜினி சென்ற காரிலும் இடம் இல்லாததால், கவுண்டமணிக்காக ரஜினியும் காரிலிருந்து இறங்கிவிடுகிறார். இருவரும் நடந்தே வீட்டுக்குச் சென்றார்கள். இருவரும் பேசிக்கொண்டே போகும்போது, நாமும் நடிக்க தானே செய்யுறோம். நமக்கு மட்டும் கார் தர்றதுல இருந்து எல்லாத்துலயும் இப்படி பண்ணுறாங்களேன்னு ஃபீல் செய்திருக்கார் கவுண்டமணி. அதற்கு ரஜினி ஒன்று சொல்லியிருக்கிறார். ‘நீங்க வேணா பாருங்கண்ணே…. எதிர்காலத்துல ஷூட்டிங்குக்கே வாரத்துல ஏழு நாளும் ஏழு கார்ல போவீங்க’ன்னு என்றிருக்கிறார் ரஜினி. அவர் சொன்னது நடக்கவும் செய்தது.
காமெடி ஜாம்பவானாக கவுண்டமணி பின்னாளில் மாறுகிறார். அதன்பிறகு, படப்பிடிப்புக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித காரில் சென்றார்.. கவுண்டமணி படப்பிடிப்புக்கு விதவிதமான காரில் வரும் செய்திகள் அப்போது துண்டுச் செய்தியாக வரும். அதற்குப் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான கதை இதுதான்.
**-ஆதினி**�,