இயக்குநர் சிவா உருவாக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. ரஜினியின் அரசியல் பிரவேசம் துவங்குவதால், தேர்தலுக்கு முன்பாகப் படத்தை முடித்துவிட இருக்கிறது படக்குழு.
ஏற்கெனவே 60 % படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்பொழுது ரஜினி கலந்துகொள்ளும் அண்ணாத்த ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஷூட்டிங்கில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கான இசையமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் டி.இமான்.
இந்நிலையில், சமீபத்தில் ரஜினியின் பிறந்த தினத்துக்கு திரை நட்சத்திரங்களில் துவங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு வருடமும் தவறாமல் ட்விட்டரில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிடும் தனுஷ், இந்த முறை எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.
என்னாச்சு என்று விசாரித்தால், வேறு புதிய தகவல்கள் சிக்கியது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவான படம் காலா. 2018ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் வெளியானது. படத்துக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால், தயாரிப்பாளராக தனுஷூக்கு படம் நஷ்டம்.
காலா படத்தினால் பல கோடிகள் நஷ்டத்தில் சிக்கினார் தனுஷ். அதை ஈடுகட்டவே அடுக்கடுக்காகப் படங்களில் ஒப்பந்தமானார். அப்படி தான் மூன்று படங்கள் வீதம் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், சத்ய ஜோதி பிலிம்ஸூக்கும் கமிட்டானார். தனுஷூக்கு காலாவினால் நஷ்டம் என்பது தெரிந்தும், மற்ற தயாரிப்பாளர்களிடம் எப்படி சம்பளத்தை பெறுவாரோ அந்த மாதிரி, கறாராக முழுமையாக சம்பளத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டாராம் ரஜினி. காலா சிக்கலுக்கு எதாவது செட்டில்மெண்ட் செய்வார் என்றும் எதிர்பார்த்திருக்கிறார் தனுஷ். அதையும் ரஜினி செய்யவில்லை என்றே தெரிகிறது.
அதோடு, ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் அறிவிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் ரஜினியின் மீது சிறிது வருத்தத்தில் தனுஷ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குடும்பத்துக்குள் இருக்கும் சிக்கல்தான், மாற்றம் ஒன்றே மாறாதது.
**-ஆதினி**�,