தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் இன்றுவரையிலும் அதிக வசூல் சாதனை படைக்கும் ஹீரோ இவர். தற்பொழுது, சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார். இப்படம், வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வது வழக்கம். இந்த கொரோனா சூழலால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது கொஞ்சம் சிரமமான விஷயமாக இருந்துவருகிறது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் ரஜினிகாந்த். சிறப்பு விமானத்தில் ரஜினி செல்ல இருக்கிறார். இதற்காக, மத்திய அரசிடம் வெளிநாடு செல்வதற்காக அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில், அரசு அனுமதி அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் ரஜினி. அந்த விமானமானது 14 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய உயர்தர விமானமாகும். அவருடன் குடும்ப உறுப்பினர்களும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். யாரெல்லாம் செல்கிறார்கள் என்கிற உறுதியான தகவல் தெரியவில்லை.
தற்பொழுது, அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். தனுஷூடன் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனும் உடன் சென்றனர். ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ஹாலிவுட் படமான க்ரே மேன் படப்பிடிப்புக்காக கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்களில் தனுஷ் இந்தியா திரும்ப இருந்தார். இந்நிலையில், ரஜினி அமெரிக்கா செல்கிறார்.
ரஜினிக்கான வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது தனுஷ் உடன் இருந்து கவனித்துக் கொள்ள இருக்கிறார். பரிசோதனை முடிந்ததும் ரஜினியுடன் தனுஷூம் இந்தியா திரும்புவார் என்கிறார்கள். ஆக, அமெரிக்காவில் குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பாக இருக்கும் என்கிறார்கள்.
**- தீரன்**
.�,