ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் இந்திய சினிமாவில் அதிக விலைக்கு (800 கோடி ரூபாய்) வியாபாரம் ஆனதாக கூறப்படும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ட்ரெய்லர் வெளியானது.
24 மணி நேரத்தில் பல புதிய சாதனைகளை இந்த ட்ரெய்லர் நிகழ்த்தியுள்ளது. தற்போது தெலுங்கு ட்ரெய்லருக்கான விருப்பத்தைக் காட்டிலும் இந்தி ட்ரெய்லருக்கான விருப்ப எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று காலை 11 மணி நேர நிலவரப்படி தெலுங்கு ட்ரெய்லர் 25 மில்லியன் விருப்பங்களும், இந்தி ட்ரெய்லர் அதைவிட 3 மில்லியன் அதிகமாக 28 மில்லியன்களுடனும் இருக்கிறது. தமிழ் ட்ரெய்லர் 4 மில்லியன், கன்னட ட்ரெய்லர் 6 மில்லியன், மலையாள ட்ரெய்லர் 2 மில்லியன் விருப்பங்கள் என ஒட்டு மொத்தமாக 65 மில்லியன் விருப்பங்களை 48 மணி நேரத்தில் கடந்துள்ளது.
இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புகளை தொடர்ந்து இரண்டு நாட்களில் நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.
தாங்கள் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகர்கள் கலந்துகொள்வது இல்லை. பத்திரிகையாளர்கள் தொடர்பில் வருவதும் இல்லாத நிலையில் தெலுங்கு திரையுலகில் முதல்நிலையில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், இந்தி நடிகை ஆலியா பட் மூவரும் இயக்குநர் ராஜமெளலியுடன் ஆர்ஆர்ஆர் படம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புக்காக இந்தியா முழுவதும் பயணிப்பது ஆச்சர்யமான விஷயம் என்கின்றது தமிழ் திரையுலகம்.
**-இராமானுஜம்**
�,