தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதுடன், வசூல் சாதனையையும் நிகழ்த்த முடியும் என்பதை உறுதிப்படுத்தியது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் சர்வதேச அளவில் இந்திய சினிமா வசூல் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் மொத்த வசூல் சாதனைகளை இனிவரும் புதிய படங்கள் சமன் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணி இணைந்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்று. 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றது. அதுபோன்று, தற்போது ஓடிடி தளத்தில் இந்தியாவிலிருந்து வந்த படங்களில், 45 மில்லியன் மணி நேரப் பார்வைகளை ஆர்ஆர்ஆர் படம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி தளம் என இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்தக் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை உருவாக்குவதற்கான பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர், ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடம் இது பற்றிய பேச்சு வார்த்தையை தனித்தனியாக நடத்தியுள்ளார். மூவருமே வெவ்வேறு பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களில் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ராஜமவுலி – மகேஷ்பாபு கூட்டணியில் தயாராகும் படப்பிடிப்பு முடிந்தவுடன் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்யலாம் என சம்பந்தபட்டவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
**அம்பலவாணன்**