பட்டினியால் வாடுகிறவர்களுக்கு உதவுங்கள் : ராஷி கண்ணா

entertainment

இந்தியா மிக மோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது. இத்தகைய வேளையில், நாம் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை மனித குலத்திற்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் செய்வது சிறந்தது என்கிறார் நடிகை ராஷி கண்ணா. இவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா பேரிடர் காலம் தொடங்கியது முதலே, அவ்வப்போது உதவிகளைச் செய்துவந்த ராஷி கண்ணா, தற்போது BeTheMiracle என்ற பெயரில் புது முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

இதன்மூலம், பசித்தோருக்கு உணவு வழங்குவதே எனது இலக்கு என்கிறார்.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோரைத் தேடி பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்துவந்தாலும் கூட தனது சேவையைப் பற்றி வெளியே தெரிவிக்கவில்லை என்று கூறும் அவர், ”தற்போது அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். தனது செயல்களை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் நல் உள்ளம் கொண்ட பலரும் பெருந்தொற்று நெருக்கடியைக் கடக்க ஏழை, எளிய மக்களுக்கு உதவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் இதனைச் செய்கிறேன்” என்று சொல்கிறார்.

BeTheMiracle சேவையில் ராஷி, ரோடி பேங்க் (Roti Bank) போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதேபோல் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அமைப்புகள், முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

இவ்வாறாக நற்பணிகள் பலவற்றையும் செய்ய தனது குடும்பத்தாரின் பங்களிப்பு நண்பர்கள், நலன் விரும்பிகளின் நிதியுதவி மட்டுமே போதுமானதாக இருக்காது என்பதால், இதற்காக மேலும் நிதி திரட்டும் வகையில், அவரின் குழுவினர் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

அதில், “BeTheMiracle மூலம் நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனது குழுவினர் இந்த கொடூர நோயின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் வெளியே சென்று மக்கள் படும் இன்னல்களைக் காட்சிப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். நிறைய குடும்பங்கள் மிகவும் கொடுமையான சூழலில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பட்டினியால் வாடுகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்களின் மனங்களைத் திறந்து உதவ வேண்டும் என வேண்டுகிறேன். பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம். நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றாக பாடுபடுவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ராஷி கண்ணா.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *