அரசியல் களமென்றாலும், திரையுலகம் என்றாலும் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இந்த இரு துருவங்களை கடக்காமல் ஒரு தலைப்பு முழுமைபெறாது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பல முக்கிய புள்ளிகள் சென்னையில் உள்ள தங்கள் வீடுகளிலும், சொந்த ஊர்களிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பலருக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய பிரபலங்கள் இந்தக் கடைப்பிடித்தலை அதிகவனத்துடனும் கட்டுப்பாட்டுடனும் பின்பற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின், கமல்ஹாசன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்க விரும்பும் கமல், கொரோனா வைரஸ் தற்காப்பிலும் அதனையே பின்பற்றியுள்ளார். கமல்ஹாசன் தன்னுடைய பொழுதை எவ்வாறு கழிக்கிறார்?
முற்றிலும் தனிமைப்படுத்துதலில் இருக்கும் கமல்ஹாசன், அவரது வீட்டில் இல்லை என்ற தகவல் கிடைத்ததும் ஆச்சரியம் அடைந்தோம். வீட்டிலும் இல்லையெனில் பின்னர் வேறு எங்கிருப்பார் கமல் என விசாரிக்கத் துவங்கினோம். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. கமல்ஹாசன் தற்போது சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள சோமர்செட் எனும் சர்வீஸ் அபார்ட்மென்டில் தங்கியுள்ளார். தனிமை, பாதுகாப்பு, திட்டமிடல் போன்ற பல்வேறு காரணங்களுக்காகத்தான் கமல் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், இங்கு வரும் விருந்தினர்கள் தங்கள் பயண வரலாறு மற்றும் சுகாதார நிலையை விவரிக்கும் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும். இது விருந்தினரை சரிபார்க்க அனுமதிக்கும் முன்பு நிர்வாகத்தால் ஆராயப்பட்டு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் கடுமையாக இங்கே பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த நவீன அபார்ட்மென்ட் ஹோட்டல் மூன்று பெட்ரூம்களுடன், சமையலறை மற்றும் அதற்கு தேவையான பொருட்கள், வாஷர் உள்ளிட்ட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் கமல்ஹாசன் தன்னை சந்திக்க யாரையும் அனுமதிக்கவோ, தானும் வெளியே செல்வதோ இல்லை. உணவை ஆர்டர் செய்யும் வசதிகள் இருந்தாலும், கமலுக்கு வெளியிலிருந்து மூன்று வேளையும் வருகிறது. ஹோட்டல் உணவை தவிர்த்த கமல்ஹாசனுக்கு, நடிகையும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் உயர்நிலைக் குழுவைச் சேர்ந்தவருமான ஸ்ரீப்ரியா வீட்டிலிருந்து உணவு வருவதாக கூறுகின்றனர். ஒரே ஒரு இளைஞர் மட்டும் உணவைக் கொண்டு வந்து கதவுக்கு அருகில் வைத்து விட்டு தகவல் கொடுத்து விடுவாராம். அந்த இளைஞரிடம் உணவைப் பெறும் கமல் தானே பரிமாறிக் கொண்டு உணவருந்திக் கொள்கிறார்.
மற்ற நேரங்களில் கிளாஸிக்காக கொண்டாடப்படும் உலக சினிமாக்கள், அவருக்கு ஆஸ்தானமான கலைஞர்களின் படைப்புகள், அரசியல் ரீதியிலான காணொலிகள், புத்தகங்கள் என தன்னை சுறுசுறுப்பாகவே வைத்து வருகிறார் கமல். சமீபத்தில் கமல்ஹாசன் பிரதமருக்கு எழுதிய கடிதம் மக்களை கவர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, இளைஞர்களுக்கு. சமூக வலைதளங்களில் கமல் பேசுவது புரியவில்லை, அவரது நிலைப்பாடு குறித்த குழப்பம் ஏற்படுகிறது என கமலை விமர்சித்து வரும் இளைஞர்கள் கூட கமலின் இந்த கடிதத்தை வரவேற்று பகிர்ந்து வருகின்றனர். இதனை அறிந்ததும் கமல் உற்சாகமடைந்திருக்கிறார். அவருக்கு நெருக்கமானவர்களும் ‘மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் இது தான்’ என கூறியிருக்கிறார்கள். கமல் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வு குறித்து தீவிரமான யோசனையிலும் தயார்படுத்துதலிலும் இந்த நாட்களை செலவிட்டு வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் அன்றைய முக்கிய நிகழ்வுகள், கொரோனா பாதிப்பு குறித்து அப்டேட்டும் வீடியோ காலில் பேசும் போது வாங்கி விடுகிறாராம் கமல்.
**என்ன செய்கிறார் ரஜினிகாந்த்?**
கொரோனாவினால் பல பிரபலங்களும் தங்கள் வீட்டில் பணிபுரியும் பணியாட்களை அவர்களது சொந்த இல்லத்திலேயே இருக்குமாறு கூறியிருக்கின்றனர். குறிப்பாக கமல், விஜய் ஆகியோர் இதனை கடைபிடித்துள்ளனர். ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிலுள்ள பணியாட்களை அங்கேயே தங்கிகொள்ளுமாறு கூறிவிட்டார். வெளி நபர்கள் யாரும் உள்ளே வராமலும், உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லாமலும் கட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர். ரஜினியின் உதவியாளர் அவருக்கு வரும் அழைப்பை எடுத்துப் பேசி வருகிறார். முக்கியமான பிரமுகர் என்றால் உடனடியாக பேசுபவர் சொல்வதைக் குறிப்பெடுத்துக் கொண்டு ரஜினியிடம் கொடுத்துவிடுவார் உதவியாளர். ரஜினி பேச வேண்டும் என்றால், ‘சார், இப்போ பேசுவாரு..’எனக் கூறி ரஜினியிடம் கொடுத்துவிட்டு அமைதி காப்பார் உதவியாளர். தகவல் மட்டும் கொடுத்தால் போதும் எனும்பட்சத்தில், உதவியாளரிடம் ரஜினி கொடுத்தனுப்பிய குறிப்பு மட்டுமிருக்கும்.
இந்த சமயத்திலும் வழக்கமாக தான் கடைபிடிக்கும் தியானம், யோகா என ஈடுபட்டு வரும் ரஜினி, அதே வேளையில் அரசியல் குறித்தும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரிடம், கட்சியாக திமுகவின் முதல் தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கை எவ்வளவு, தமிழ்நாட்டில் அப்போதைய சூழல் எப்படி இருந்தது போன்ற தகவல்களை திரட்டி வருகிறார் ரஜினி. திமுக மட்டுமில்லாமல், எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய பொழுது முதன் முறை வென்ற வாக்கு எண்ணிக்கை, ஜெயலலிதா, வைகோ, மூப்பனார், ராமதாஸ், விஜயகாந்த் என அனைத்து அரசியல் தலைவர்களின் முதல் தேர்தல் வெற்றி குறித்தும், முதல் தேர்தலில் அவர்கள் கட்சி பெற்ற வாக்குகள் எவ்வளவு என்றும் கணக்கெடுப்புகளில் இறங்கியுள்ளார். விரைவில் கட்சி துவங்கவுள்ளதால் இந்த முடிவுகளை வைத்து காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார் ரஜினி.
இது போக, மாலை நேரங்களில் தான் நடித்ததில் தனக்கு பிடித்த பழைய படங்களை பார்த்து வருகிறார் ரஜினி. மலரும் நினைவுகளை அசை போட்டபடி காலத்தின் மாற்றங்களை நிதானமாக சுவடெடுத்து வருகிறார் இந்த ஊரடங்கு காலத்தில் ரஜினி.
**முகேஷ் சுப்ரமணியம்**
�,