மகாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ரன்வீர்சிங்கின் ’83’ படத்தைவிட அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 17 அன்று வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டு நாட்களில் திரையரங்குகள் மூலம் ரூபாய்100 கோடி வசூலை எட்டியது.
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
படம் வெளியாகி ஆறு வாரம் ஆன நிலையிலும் இன்னும் சில தியேட்டர்களில் ஓடுகிறது. இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் வட்டாரங்களில் கூட இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த வரவேற்பின் காரணமாக இந்தி படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வட இந்திய பகுதிகளில் ரன்வீர் சிங் நடித்த ’83’ படத்தைக் காட்டிலும் ‘புஷ்பா’ படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளது.
மும்பையில் மட்டும் ரூ. 35.89 கோடி வசூலித்து இந்தப் பிராந்தியத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது ‘புஷ்பா’. அக்ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி படம் ரூ.81.43 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டரன்வீர் சிங் நடித்துள்ள ’83’ படம் ரூ.34.03 கோடி வசூல் செய்து மூன்றாமிடத்திலும், சல்மான் கான் – ஆயுஷ் ஷர்மா நடித்த ஆன்டிம் – தி ஃபைனல் ட்ரூத் படம் ரூ. 11.53 கோடி வசூல் செய்து நான்காம் இடத்திலும் உள்ளது.
மும்பை மட்டுமல்ல சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், அசாம் மற்றும் ஒடிஷா மாநிலங்களிலும் ’83’ படத்தை விட ‘புஷ்பா’ வசூலில் முந்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
**-இராமானுஜம்**
�,