திரைவிமர்சனம்
திரையரங்கில் மட்டுமே புதுப்படங்கள் வெளியாகும் என்கிற வழக்கம் மாறி, நேரடியாக ஓடிடி எனும் டிஜிட்டல் தளத்தில் புதுப் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், அடுத்தப் பரிணாமமாக திரைக்கு முன்பே தொலைக்காட்சியில் நேரடியாகப் படங்கள் வெளியாகும் டிரெண்ட் துவங்கிவிட்டது. அப்படி, இந்தப் பொங்கலுக்குத் திரையரங்கில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களும் ஓடிடியில் மாறா, பூமி படங்களும் வெளியானதைத் தொடர்ந்து, நேரடியாக தொலைக்காட்சி ரிலீஸாக வெளியாகிய படம் புலிக்குத்தி பாண்டி. படம் எப்படி இருந்தது?
உதவி செய்யப் போன இடத்தில், செய்யாத தப்புக்குக் கொலைப் பழி பெறும் சமுத்திரகனிக்குத் தூக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது. சமுத்திரகனியின் மகன் தான் விக்ரம் பிரபு என்கிற புலிக்குத்தி பாண்டி. ஊருக்குள் சண்டைப் போட்டுக் கொண்டு சுற்றும் ரொம்ப நல்ல ஹீரோ. கொடை வள்ளல், ஆயிரம் பேரைக் கூட வீழ்த்தும் வீரன். கட்டினால் புலிக்குத்தி பாண்டியை மட்டும் தான் கல்யாணம் செய்வேன் என வைராக்கியத்துடன் இருக்கும் நாயகி லட்சுமிமேனன் என்கிற பேச்சி. ஊருக்குள் கந்துவட்டி கொடுக்கும் வில்லன் வேல.ராமமூர்த்தி என்கிற சின்னாசி. வில்லன் & பேமிலியால் நாயகிக்கு ஒரு ஆபத்து ஏற்படுகிறது. அதை சண்டியர் புலிக்குத்தி பாண்டி தடுத்துநிறுத்துகிறார். பழிவாங்க நினைக்கு வில்லனால் புலிக்குத்தி பாண்டி என்ன ஆனார், நாயகி பேச்சி செய்யும் ஆக்ஷன் என முடிகிறது திரைப்படம்.
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் படங்களை இயக்கிய முத்தையாவின் படமே புலிக்குத்தி பாண்டி. முந்தைய நான்கு படங்களில் என்ன செய்தாரோ, ஒரு சின்ன பிசகு கூட இல்லாமல் அதன் புது வெர்ஷனாக இந்தப் படத்தை எடுத்துவைத்திருக்கிறார். சண்டித்தனம் செய்யும் நல்ல ஹீரோ. யாருக்காவது பிரச்னை என்றால் முன்னாடி வந்து நிற்கும் ஹீரோ. தப்பு என்றால் உடனே தட்டிக்கேட்கும் ஹீரோ. அதுபோல, ஹீரோ மீது எத்தனை கேஸ் இருந்தாலும், அவரை காதலிக்கும் ஹீரோயின், நாயகியிடம் வம்பிழுக்கும் ஒரு வில்லன். அதை தட்டிக்கேட்கும் ஹீரோ எனும் முத்தையாவின் அரைத்த மாவையே மறுபடியும் அரைத்திருக்கும் படம் புலிக்குத்தி பாண்டி.
விக்ரம்பிரபு, லட்சுமிமேனன், வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், பாலா, தினா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களெல்லாம் எப்படி நடித்தார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதென்றே நினைக்கிறேன். முத்தையாவின் முந்தைய படங்களில் நடிகர்கள் எப்படி நடித்தார்களோ, அப்படியே இதிலும் நடித்திருக்கிறார்கள். முந்தையப் படங்களைப் போலவே, இதுவும் கிராமத்துக் கதையம்சம் கொண்ட திரைக்கதை தான்.
குட்டிப்புலி, கொம்பன் படத்தின் பல காட்சிகளை இந்தப் படமும் நினைவுபடுத்துகிறது. இனி சண்டைப் போட்டுக் கொண்டு சண்டித்தனம் செய்யாதே என ஹீரோயின் சொன்னதும் அப்படியே கேட்டுவிடும் ஹீரோ, அதன்பிறகு எந்த வம்புக்கும் செல்லாமல் இருக்கிறார். அதே ஹீரோயினுக்கு எதாவது பிரச்னை என்றால் மீண்டும் வம்புக்குச் செல்கிறார். இன்னும் எத்தனை சினிமாவில் இந்தக் காட்சிகள் இடம்பெறப் போகிறது எனத் தெரியவில்லை. படம் முழுக்க வன்முறை நிறைந்திருக்கிறது. ஹீரோ சண்டை போடுவது மட்டுமல்லாமல், ஹீரோயினையும் வன்முறையில் இறக்கிவிட்டிருக்கிறார் முத்தையா.
சரவெடியாக வரும் ஆர்.கே.சுரேஷ் மற்றும் சன்னாசியாக வரும் வேல.ராமமூர்த்தி இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே வன்முறையும் ஆபாசமும் நிறைந்த காட்சிகளாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் லட்சுமி மேனன் இவர்களை பழிவாங்குகிறார். காமெடியனில் துவங்கி படத்தில் வரும் அனைத்து சாது கேரக்டர்களும் அதிரடி ஆக்ஷன் காட்டுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல் எடையைக் குறைத்து லட்சுமி மேனன் கம்பேக் கொடுத்திருக்கும் சினிமா. வித்தியாசமான கதையில் நடித்து ரசிகர்களை ஈர்ப்பார் என்று நினைத்தால் அப்படியொன்றும் நடக்கவில்லை இதற்கு லட்சுமி மேனன் கம்பேக் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாவதால் குடும்பத்தோடு படத்தை பார்ப்பார்களே, குறிப்பாக குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படமாக இருக்குமே என்கிற எந்த அக்கறையும், கவலையும் இன்றி வன்முறையை கட்டவிழ்த்துவிடும் படமாகத் திரையில் நீள்கிறது புலிக்குத்தி பாண்டி. கிராமத்து மண்வாசம் வீசும் படம் என்கிற போர்வைக்குள் இருந்துகொண்டு குறிப்பிட்ட சாதியமைப்பினருக்கான படமாகவே மீண்டும் மீண்டும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் முத்தையா. பழிக்கு பழி தான் தீர்வென்பதை அழுத்தமாக விதைக்கும் இப்படியான கமர்ஷியல் விஷச் சினிமாக்கள் தேவையா என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.
**-ஆதினி**�,