�புது கார் வீடியோ ஏன் போட்டேன் தெரியுமா..’’ நெகிழ வைக்கும் ’ட்ரெண்டிங் கோமாளி’!

entertainment

புகழ்… இன்று தமிழ்நாட்டில் பலருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும் கலைஞன். நூறு ரூபாயுடன் சென்னைக்கு வந்திறங்கி, இன்று விருது மேடையில் மிளிர்ந்தது எல்லாம் வேற லெவல் ராட்சச வளர்ச்சி. நேற்று முன்தினம் (மார்ச் 1) தன் யூடியூப் செனலில் இவர் வெளியிட்ட வீடியோ இன்று வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர். யாரோ முகம் தெரியாத ஒருவரை நம்பி சென்னை வந்த புகழ், ஏமாற்றப்பட்டு புதுப்பேட்டை சாலைகளில் கையில் காசில்லாமல் சுற்றி திரிந்தாராம். பின்பு அங்கு வெல்டிங் வேலை செய்து கூலி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாராம். அதன் பின்னர் லேத்து பட்டரை, ரூஃபிங் என அவர் பார்க்காத வேலையே கிடையாது. இறுதியாக பிரசாத் ஸ்டுடியோ வாசலில் லாரிக்கு வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்தார். அப்போது அவரின் ஹியூமர் சென்ஸ் பார்த்து நண்பர் மூலமாக விஜய் டிவியில் சின்ன சின்ன வாய்ப்புகள் தேடி வர, வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்று புகழின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் புகழ்.

பிரசாத் ஸ்டுடியோ வாசலில் துணி முழுக்க கிரீஸ் கரையுடன் அங்கு வரும் விஜய் டிவி பிரபலங்களை ஏக்கத்துடன் பார்த்த நாட்களை ஒவ்வொரு பேட்டியிலும் குறிப்பிட்டு கண்கலங்குகிறார் புகழ்.

சரி அவரின் சமீபத்திய ட்ரெண்டிங் வீடியோ விஷயத்துக்கு வருவோம். புதிதாக கார் வாங்கியிருக்கும் புகழ், அது குறித்து நெகிழ்ச்சியான [வீடியோ ஒன்றை வெளியிட்டார்](https://www.youtube.com/watch?v=F8w6693a1uw). அந்த வீடியோவில், “நான் கார் துடைக்கும் வேலை பார்த்திருக்கிறேன். இன்று கார் வாங்கியிருக்கிறேன். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், என்னால் முடிவது உங்களாலும் முடியும். உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும் என்பதால் தான் இந்த வீடியோ உங்களுக்காக பதிவிடுகிறேன். இது அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம். என் பரம்பரையிலேயே முதன்முதலாக கார் வாங்கியது நான் தான். என் அம்மாவிடம் இதை சொல்லும்போது கண்கலங்கிவிட்டேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் புகழ். வாழ்த்துக்கள் புகழ்.

– ஆதினி

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *