சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,21,170 பேரை பாதித்துள்ளது. கொரோனா குறித்த தகவல்களை வெளியிடும் வேர்ல்டோமீட்டரின்(Worldometer) தரவுகளின் படி 4377 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பயத்தின் காரணமாக பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகள், விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
E3 என்று அழைக்கப்படும் எலெக்ட்ரானிக் எண்டர்டெயின்மெண்ட் எக்ஸ்போ(Electronic Entertainment Expo) 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வர இருக்கும் பல புதிய வீடியோ கேம்களின் அறிமுகத்துக்காக கேம் பிரியர்கள் பலர் காத்துக்கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக, திருவிழா ரத்து செய்யப்பட இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பாடகர்கள் மைலி சைரஸ், மடோன்னா, மரியா கர்ரே, தென் கொரியாவின் பாடகர்கள் குழு பிடிஎஸ் (BTS), ஆகியவர்களின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்குபெறும் கோச்செல்லா இசைநிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்னால்ட் ஸ்வாஸ்நேகரால் நடத்தப்படும் பாடி பில்டிங் நிகழ்வு, லண்டன் புத்தகத்திருவிழா, பராகுவே திரைப்படவிழா ஆகியவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று பல நிகழ்ச்சிகள் விளையாட்டுகள், போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் 2020 ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் தலைவர் யோஷிரோ மோரி நேற்று (மார்ச் 11) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் “ஒலிம்பிக்ஸ் போட்டியை தள்ளி வைக்கும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் தகுந்த பாதுகாப்புடன் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும் எனவும், கொரோனா பாதிப்பால் போட்டியை தள்ளி வைக்கலாம் எனக்கூறிய ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர் மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று (மார்ச் 12)டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோக் கூறும்போது “கொரோனா வைரசால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறமுடியாவிட்டாலும், போட்டிகளை ரத்து செய்யும் திட்டமே இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பாரம்பரிய நிகழ்வான ஒலிம்பிக்ஸ் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, இன்று கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.
**-பவித்ரா குமரேசன்**�,