எமோசனல் கதை எப்போதும் ஜெயிக்கும்: தயாரிப்பாளர் ரெங்கநாதன்

Published On:

| By Balaji

திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு எங்கெல்லாம் கத்தரி போட்டால் படம் க்ரிப்பாக இருக்கும் பார்வையாளர்கள் நெளியாமல் பார்ப்பார்கள் என்பதை துல்லியமாக கணிக்ககூடியவர்கள் தியேட்டரில் படம் ஓட்டும் ஆப்பரேட்டர்கள். சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரே படத்தை தினசரி 12 மணிநேரம் பல தரப்பு மக்களோடு இணைந்து பார்க்ககூடியவர்கள் ஆப்பரேட்டர்கள்.

படத்தின் தயாரிப்பையும், அதன் வெற்றி தோல்விகளையும் கணிக்கக்கூடியவர்கள். திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் நடிப்பு, இயக்கம், நடனம், ஸ்டண்ட் என பல துறை ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்றவர்கள். லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி திரைப்பட கல்லூரிகளில் மாணவர்கள் கற்பதை சம்பளம் வாங்கிகொண்டு நேரடியாக கற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் .

திரைத்துறை ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றுகிறபோது அவர்களது நெடிய அனுபவத்தை உள்வாங்கி கொண்டவர்கள். வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தேனப்பன், இவர்கள் வரிசையில் தர்மபிரபு மூலம் தயாரிப்பாளரான தயாரிப்பு நிர்வாகி ரெங்கநாதனை கூறலாம்.

வடிவேலு இல்லாத சூழ்நிலையில் துண்டு துக்கடா கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு, பிசியான காமெடி நடிகராக மாற்றம் கண்டார். அவரை கதாநாயகனாக மாற்றி தர்ம பிரபு படத்தை தயாரித்தவர் ரெங்கநாதன். வடிவேல், விவேக் இவர்களே கதாநாயகனாக வளர முடியாத நிலையில் யோகிபாபு எம்மாத்திரம் என்றவர்கள் மத்தியில் தர்மபிரபு படத்தை வணிக ரீதியாகவும் வசூல் அடிப்படையிலும் வெற்றிப்படமாக்கியவர் ரெங்கநாதன்.

என்னுடைய முதல் படமான `ஒரு கல்லூரியின் கதை’ படத்துக்குப் பிறகு, பெரிய நடிகர்களை வெச்சுப் படம் பண்ணாமல் சின்னச்சின்ன நடிகர்களை வெச்சுப் படம் பண்ணினதாலதான், என் கரியர்ல கொஞ்சம் சரிவு ஏற்பட்டுச்சு. என்னதான் கதை பண்ணினாலும், தயாரிப்பாளர்கள் வந்தாலும் ஸ்டார் வேல்யூ இல்லாமல் ஜெயிக்கமுடியாது, அப்படிங்கிற சூழலை லேட்டாதான் புரிஞ்சுக்கிட்டேன். அதனால, கொஞ்சம் கேப் எடுத்துக்கிட்டு நிறைய கதைகள் எழுதினேன்.

நம்ம சினிமா வட்டத்துக்குள்ள இருந்துகிட்டே இருக்கணுங்கிறதால அப்பப்போ படங்கள்ல நடிச்சுக்கிட்டும் இருந்தேன். இப்போ ஒரு பெரிய பட்டாளத்தை வெச்சு `ஆனந்தம் விளையாடும் வீடு’ன்னு ஒரு படத்தை எடுத்து முடிச்சிருக்கேன். இனி எல்லாம் ஏறுமுகமாகத்தான் இருக்கும்னு நம்புறேன்” என நம்பிக்கை வார்த்தைகளை பத்திரிகையாளர்களிடம் இயக்குநர் நந்தா பெரியசாமி உதிர்த்தார். அவரை அடையாளம் கண்டு “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தை கொரோனா தொற்று, ஊரடங்கு நெருக்கடிகளுக்கு மத்தியில் படப்பிடிப்பை முடித்து வந்திருக்கின்றார் தயாரிப்பாளர் ரெங்கநாதன்.

இதுகுறித்து நாம் ரெங்கநாதனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்…

**நந்தா பெரியசாமியை இயக்குநராக எப்படி தேர்வு செய்தீர்கள்?**

தர்மபிரபு படத்துக்கு பின் படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்த போது அது ஒரு பக்கா குடும்ப படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் கூட்டுக் குடும்ப வாழ்க்கை அழிந்து வரும் காலமிது பக்கத்துவீட்டுக்காரர், யார் என்பது கூட தெரியாமல் வாழ்ந்துவரும் இன்றைய சமூகத்திற்கு கூட்டு குடும்ப வாழ்வியலையும், அதன் மகிழ்வையும் ஆவணப்படுத்தவும் அதனை அகன்ற திரையில் காண்பிக்க முடிவு எடுத்த போது என் கண்முன் தெரிந்தவர் இயக்குநர் நந்தா பெரியசாமி .வெற்றிபெற்றவர்களிடம் தெனாவட்டு இருக்கும் வெற்றிக்காக போராடுபவர்களிடம் வெற்றிபெற வேண்டும் என்கிறவெறி இருக்கும். அதற்கு நந்தா பெரியசாமி பொருத்தமானவர்.

**ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் கதை எப்படி?**

இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு குடும்பம் என்ன காரணத்துக்காக பிரிஞ்சிருக்காங்க, அவங்களை ஹீரோ எப்படி ஒண்ணு சேர்க்கிறார்ங்கிறதுதான் படத்தின் ஒருவரிகதை என்றார். அது நான் நினைத்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையுடன் கனெக்ட் ஆனது

படத்தின் அடிநாதம். ஆனால், உள்ள இருக்கிற திரைக்கதையில நிறைய புதுப்புது விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

**நடிகர்கள் கூட்டம் அதிகமா இருக்கே இவர்களை ஒருங்கிணைப்பதே சவாலான செயலாக இருந்திருக்குமே?

கதாநாயகன் கெளதம் கார்த்திக், கதாநாயகி, சிவாத்மிகா படத்தில் டிவி ஆங்கரா நடிச்சிருக்காங்க இவர்களுடன் இயக்குநர் சேரன், சிநேகன், `பருத்திவீரன்’ சரவணன், சிங்கம்புலி, விக்னேஷ், டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், செளந்தர்ராஜன், மொட்டை ராஜேந்திரன், மெளனிகா, `மைனா’ சூஸன், `நக்கலைட்ஸ்’ தனம் அம்மா, செல்லா, முனீஷ்ராஜ், ஜோ மல்லூரி, பிரியங்கா, வெண்பான்னு கிட்டத்தட்ட 35 முன்னணி நடிகர் நடிகைகள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றார்கள் எல்லோருக்கும் படத்தில் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். படம் முழுக்க அந்த விழாக்கோலம் இருந்துக்கிட்டே இருக்கும்.

சவால்கள் என்று பார்த்தால் கொரோனா காலத்துல தான் படத்தை தொடங்கி எடுத்து முடித்தோம். இயக்குநர் எழுதின கதையைப் படமாக்கணும் அப்படிங்கிறதைத் தாண்டி கொரோனாவில் இருந்து எல்லோரையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்கிற சவால், அச்சம் இருந்துக்கிட்டே இருந்தது.

**ஓ.டி.டி காலமிது இந்தச் சூழல்ல ஒரு கூட்டு குடும்பகதை வெற்றிபெறும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?**

எமோஷனுக்கு எல்லாக் காலங்களிலும் பெரிய மதிப்பு உண்டு. கூட்டுக் குடும்பம் வேணுங்கிற உணர்வை எல்லா மட்டங்களிலும் கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி ஏற்படுத்தியிருக்கு. நிச்சயமா படம் பார்க்கிறவங்களுக்கு இதயம் கசிஞ்சு கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீராவது வரும். பிரிஞ்ச குடும்பங்கள் ஒண்ணு சேருவாங்க, திருமணமாகாமல் இருக்கும் சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும் என்று நம்புகிறேன்” என்றார்

வழக்கமாக செட் போட்டு படப்பிடிப்பை நடத்துகிற சினிமாவில், திண்டுக்கல் அருகில் புதிதாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்கள். புதிய வீடு எதற்கு என்ற கேள்விக்கு,

“கதைப்படி 7 சகோதரர்கள் அவர்களின் ஒரே ஆசை சொந்தமாக வீடு கட்டி கூட்டுக் குடும்பமாக வாழவேண்டும் என்பதுதான். அதனால் வீடு கட்ட தொடங்கியதில் இருந்து முடியும் வரை யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் இதனை செய்தோம் என்கின்றனர் இயக்குநர் வட்டாரத்தில்.

தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்ப படங்கள் அரிதாகவே வெளியாகி இருக்கிறது ஆனந்தம், சமுத்திரம், பாண்டவர் பூமி, கடைக்குட்டி சிங்கம்போன்ற படங்களின் வரிசையில் “ஆனந்தம் விளையாடும் வீடு” இடம்பெறும் இந்த படங்களில் எல்லாம் கூட்டுக் குடும்ப சிதைவுக்கு பெண்கள், வெளியில் இருந்து வரும் வில்லன்கள் காரணமாக இருப்பார்கள் ஆனால் இந்தப்படத்தில் ஏழு சகோதரர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்துவேறுபாடுகளே மையக்கருவாக இருக்கிறது” என்றனர்

பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தை காட்டிலும் இரு மடங்கு நட்சத்திர குவியல் இருப்பதால் ஓடிடி நிறுவனங்கள் படத்தை வாங்குவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளரும், இயக்குநரும் திரையரங்கில்தான் படத்தை வெளியிடுவோம் என்பதில் உறுதியாக இருப்பதால் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரையரங்குகளில் குடும்பங்கள் நிறைந்த கூட்டத்தை கொண்டுவரும் என்கின்றனர் படத்தின் சில பகுதிகளை பார்த்த முன்ணனி திரைப்பட விநியோகஸ்தர்கள்.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share