தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடவும் படக்குழு முன்னதாகவே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை நூறு நாட்கள் கழித்துத்தான் இணையத்தில் வெளியிடவேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை. அதன்பின், குறைந்தது ஐம்பது நாட்கள் இடைவெளியாவது வேண்டும் என்று சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இந்தப்படத்துக்காக மேலும் இறங்கி வந்து நான்கு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் இரண்டு வாரங்களில் வெளியிடும் முடிவில் படக்குழு உறுதியாக இருக்கிறது. அப்போதுதான் ஓடிடி வெளியீடு மூலமாக அதிக தொகை கிடைக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு வார இடைவெளியில் தலைவி படத்தை ஓடிடியில் வெளியிட்டால் படத்தை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் தலைவி படத்தயாரிப்பாளர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்படி இன்று தலைவி படக்குழு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது.
இதில் சுமுக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே தலைவி படம் திரையரங்குகளில் வெளியாகும்.
**-இராமானுஜம்**
�,