Nபிருத்விராஜ் படத்துக்கு தடை!

Published On:

| By Balaji

மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் பிருத்விராஜ். இந்தப்படத்தின் கதை கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவா குன்னேல் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதையடுத்து கடுவா குன்னேல் குருவச்சன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடுவா படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் என்னுடைய வாழ்க்கையை படமாக்க படக்குழுவினர் அனுமதி கேட்டனர். அப்போது எனது கதாபாத்திரத்தில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும். குறிப்பாக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் நான் செயல்பட்டதாக எனது கதாபாத்திரத்தை சித்தரிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கினேன்.

எனது கதையை படமாக்கியுள்ள ஷாஜி கைலாஷ், மோகன்லால், சுரேஷ்கோபி அல்லாமல் பிருத்விராஜை நாயகனாக வைத்து படமாக்கியிருக்கிறார். இதை படத்தின் முன்னோட்டம் வெளியான போது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது . அதனால் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை விசாரித்த எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி படத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share