பாலைவன ‘ஆடுஜீவிதம்’: இந்தியா வர காத்திருக்கும் பிருத்வி
ஜோர்டன் நாட்டில் நடைபெற்று வந்த ‘ஆடுஜீவிதம்’ மலையாளத் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவு பெற்றதாக நடிகர் பிருத்வி ராஜ் தெரிவித்துள்ளார்.
பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்து வரும் ‘ஆடுஜீவிதம்’ படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டின் பாலைவனப் பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென ஏற்பட்ட கொரோனா பரவல், அதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஆகிய காரணங்களால் ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள பாலைவனத்தில் சிக்கித் தவித்தனர்.
படப்பிடிப்பையும் தொடர முடியாமல், சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாமல் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட படக்குழுவினர் உணவுப் பொருட்களைப் பெறுவதிலும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இது தொடர்பான தகவல்களை பிருத்வி ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து பேக்-அப் செய்து கொண்டதாக நடிகர் பிருத்வி ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜோர்டனில் தவித்து வந்த படக்குழுவினர் அனைவரும் இணைந்து ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.
பல்வேறு தடைகளைக் கடந்து ஜோர்டன் பாலைவனத்தில் ‘ஆடுஜீவிதம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த செய்தி பிருத்வி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எனினும், நடிகர் பிருத்வி ராஜ் தனது படக்குழுவினருடன் மீண்டும் இந்தியாவுக்கு எப்போது திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”