நடிகர் பிரசன்னா ‘மறதி ஒரு தேசிய வியாதி’எனக் குறிப்பிட்டு இங்கு மாற வேண்டியது எதுவும் மாறவே இல்லை என்று கூறி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகமே முடங்கிப் போயிருந்தாலும் பயங்கரங்களும், படுகொலைகளும் மட்டும் பஞ்சமின்றி நடந்து வருகின்றன. ஊரடங்கு விதியை மீறியதாகக் கூறி சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலர்களால் அடித்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது. அந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் முன்னதாகவே அறந்தாங்கியில் ஏழு வயது அப்பாவிக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அடுத்த கொடூரம் இதே தமிழகத்தில் நிகழ்கிறது.
இன்னும் வெளியே தெரியாமலும், ஊடக வெளிச்சம் காணாமலும் எத்தனையோ கொடுமைகள் மூடி மறைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இந்த அநீதிகள் குறித்து பொதுமக்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன் நீதி வேண்டியும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவங்கள் குறித்துக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் **“ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்ரியா எல்லாமே அடுத்த பரபரப்பு நிறைந்த மரணம்/ கொலை/ பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வரும் வரையில் தான். அதன் பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேகுகள் மாறிவிடும். ஆனால் எது மாற வேண்டுமோ அது மட்டும் மாறவே இல்லை. இவை எல்லாம் சோர்வை ஏற்படுத்திவிட்டன. சோகம் மட்டும் தான் எஞ்சுகிறது.”** என்று கூறியுள்ளார். மேலும் **‘மறதி ஒரு தேசிய வியாதி’** என்றும் பிரசன்னா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”