இயக்குநர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது. அதற்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்துவருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற ஜனவரி 6ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. அதனால், படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அனைவருக்குமே நெகட்டிவ் வந்திருக்கிற காரணத்தினால், மகிழ்ச்சியாகப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது படக்குழு.
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பரில் தொடங்கியது. முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்து பகுதிகளில் நடைபெற்றது. அதன்பிறகு, புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் சில நாட்கள் நடைபெற்றது. அதோடு கொரோனாவினால் படப்பிடிப்பு நின்றது. அதன்பிறகு, இப்போதுதான் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் ஹைதராபாத் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்கள். குறிப்பாக, கொரோனா அச்சுறுத்தலால் எட்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்த ஐஸ்வர்யா ராய், ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் விக்ரம் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஆனால், அடுத்தகட்டப் படப்பிடிப்பில்தான் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துவருகிறார்.
கோப்ரா படத்துக்கான பாடல் காட்சிப் பதிவு செய்யும் பணிகள் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. நடன கலைஞர் பிருந்தா மாஸ்டர் நடன இயக்கம் மேற்கொள்ள நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தை முடித்த பிறகு தான், பொன்னியின் செல்வன் படத்தில் கலந்துகொள்வாராம் விக்ரம்.
இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் உருவாக இருக்கிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவின் முக்கிய திரைமுகங்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் தயாரித்துவருகிறார்.
**-ஆதினி**�,