மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவி வர்மா ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகா தயாரிப்பில் படம் உருவாகிவருகிறது.
இந்தப் படத்துக்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேசம் பகுதிகளில் நடந்துவருகிறது. அரண்மனை , கோட்டை என பாரம்பரியமிக்க இடங்கள் அங்கிருப்பதால் லைவ்வாக படப்பிடிப்பைப் படக்குழு நடத்திவருகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் அருள்மொழி வர்மன் @ ராஜ ராஜ சோழனாக நடித்துவருகிறார்.
படப்பிடிப்பை முடித்துவிட்டதை சமீபத்தில் ட்விட்டரில் ஜெயம் ரவி அறிவித்ததும், அதற்கு நடிகர் கார்த்தியின் பதில் ட்விட் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், விக்ரமும் அவருக்கான படப்பிடிப்புக் காட்சிகளை முடித்துவிட்டாராம்.
பொன்னியின் செல்வனின் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, பொன்னியின் செல்வனுக்கான இரண்டு பாகத்துக்குமான படப்பிடிப்பும் விக்ரமுக்கு முடிந்துவிட்டதாம்.
மத்தியப்பிரதேச பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் பிரகாஷ்ராஜ், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த வருட சம்மரில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை முடித்துவிட்ட விக்ரம், கோப்ரா & மகான் படங்களின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
கூடவே, கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பாதியிலேயே நிற்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் முடித்துவிட்டால் நன்றாக இருக்குமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
**- ஆதினி **
�,