இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ‘ஜெயம்’ ரவி உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கின்றனர்.
வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில் இதன் முதல் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடந்து வரும் வேளையில் படத்தின் பாடல்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் ஆறு பாடல்கள், இரண்டாம் பாகத்தில் ஆறு பாடல்கள் என மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படத்தின் இசைக்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகா மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. ஒரு காட்சியின் பின்னணி இசை குறித்து இயக்குநர் மணிரத்தினம் விளக்கி சொல்லும் காட்சிகள் கூட சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய் மற்றும் இந்தியாவில் என இரண்டு இடங்களில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. விரைவில் முதல் பாடல் வெளியாக இருக்கும் நிலையில் அந்த பாடலின் முதல் வரி 1950களில் வெளியான ‘நீலமலை திருடன்’ படத்தின் ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்ற வரிகளோடு தொடங்கும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
**ஆதிரா**
�,