மணிரத்னத்தின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களாகப் படப்பிடிப்பையும் நடத்திவருகிறது படக்குழு.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பல கலைஞர்கள் படத்தில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 50 நாட்களுக்கு மேலாக நடந்துவந்த படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. மூன்று பிரம்மாண்ட செட்டில் அனைத்துக் கலைஞர்களும் நடிக்க பெரும் பகுதியைப் படமாக்கி முடித்திருக்கிறது படக்குழு.
பொதுவாக, முதல் பாகத்தின் வெற்றியைப் பொருத்தே இரண்டாம் பாகம் உருவாகும். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு பாகத்தை மணிரத்னம் இயக்குவதற்கும் காரணம் இருக்கிறது. ஹிஸ்டாரிக்கல் திரைப்படமென்பதால் மீண்டும் ஒரே இடத்தில் எல்லா நடிகர்களையும் ஒன்றிணைப்பது சவாலான ஒன்று. ஏனெனில், ஒவ்வொரு நடிகர்களுமே அடுக்கடுக்காகப் பல படங்களைக் கையில் வைத்திருக்கிறார்கள். அனைவரின் தேதியும் ஒன்றாகக் கிடைப்பதென்பது இயலாத ஒன்று.
அதுபோல, மீண்டும் எல்லா நடிகர்களையும் அதிக முடி வளர்க்க சொல்வதில் துவங்கி நிறைய வேலைகள் அதில் இருக்கிறதாம். அதோடு, இரண்டு பாகத்தையும் ஒரே நேரத்தில் எடுப்பதால் செட் அமைக்கும் பணியில் பெரும் செலவு குறையுமாம்.
ஆரம்பத்தில் படத்தின் பட்ஜெட்டை திட்டமிடும் போதே, இரண்டு பாகமாகப் படத்தை வெளியிட்டால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.. அதன்படிதான், இரண்டு பாகமாக பொன்னியின் செல்வன் உருவாகிறது. இதில், மணிரத்னத்துக்கு ஒரு பெரும் சவால் காத்திருக்கிறது. முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற வேண்டும். அப்படி, வரவேற்பைப் பெறவில்லை என்றால் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்காது. இதனால், முதல் பாகத்தின் வெற்றியில் அதிக கவனத்துடன் இருக்கிறார் மணிரத்னம்.
– தீரன்
�,