பொன்னியின் செல்வனிலிருந்து விலகிய பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் !

Published On:

| By Balaji

மணிரத்னம் இயக்கத்தில் இந்தியாவின் உச்ச நடிகர்கள் இணைஇணைந்து நடிக்க உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. எம்.ஜி.ஆரில் துவங்கி பல பிரபலங்களும் படமாக்க நினைத்த பொன்னியின் செல்வனை திரைமொழியில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார் ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவருகிறார்கள். தற்பொழுது, ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படத்தின் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்பந்தமானவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன். படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை. படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது. அமிதாப் நடிப்பது முக்கிய ரோல் என்று சொல்லப்படுகிறது. மணிரத்னம் விரைந்து முடிவெடுத்து, அவருக்குப் பதிலாக அந்த ரோலில் நடிக்க பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்கிறார்கள். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களில் பிரகாஷ்ராஜ் இருப்பார். மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, பிப்ரவரி மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த இரண்டு மாத படப்பிடிப்பிலேயே பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டாராம் இயக்குநர். அதோடு இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஆறுமாத இடைவெளிக்குள் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

– ஆதினி�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share