ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்துக்காக நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் பாடிய பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தில் இடம்பெறும் ‘வா செல்லம்’ என்னும் பாடல் நேற்று (மார்ச் 3) வெளியானது. சூர்யா மற்றும் கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ள இந்தப் பாடல் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
பிருந்தா ஏற்கனவே ஜாக்பாட், மிஸ்டர் சந்திரமௌலி, ராட்சசி போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்தப் பாடலும் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. அன்புக் குழந்தைக்கான அழகு தாலாட்டாக அமைந்துள்ள இந்தப் பாடலின் வரிகளும், பிருந்தாவின் குரலும் அனைவரது மனத்தையும் வருடும் விதத்தில் அமைந்துள்ளது.
**வா செல்லம், என் வாழ்க்கை பரிசா தந்த பூவே**
**தாயாக என்னப் பெத்த தாயே வாடி**
**நீ கேட்டா என் உசுர பாலா தாரேன் பூவே**
**நீ நீந்தத் தான் கைகள் கொண்டேன் வாடி**
என விவேக் எழுதிய பாடல் வரிகளில் தாயின் அரவணைப்பு ததும்புகிறது.
ஜே.ஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மேலும் பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”