Xபொன்மகளும், சில திரைப்பெண்களும்!

entertainment

நிவேதிதா லூயிஸ்

கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப்பதுகூட அறியாத அப்பாவியாக அழுது அரற்றுகிறார். இது போன்ற ‘தாய்மை’யைத்தான் நம் சமூகம் கொண்டாடித் தீர்க்கிறது. ஆண் கிழித்த கோட்டின் வரையறைக்குள் வாழ்வதுதான் பெருமை என்று கற்பிக்கப்பட்ட பெண்கள் இவர்கள். ‘ஐடியல்’ அம்மாக்கள்! ஆனால், இந்த அம்மா பாத்திரத்துக்கு சவால் விடும் பெண்ணிய அம்மா கதாபாத்திரம் ஒன்றை 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா பார்த்திருக்கிறது, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில்!

கங்கா என்ற கல்லூரி மாணவி மழை நாள் ஒன்றில் முகமறியாத ஆண் ஒருவனால் கெடுக்கப்பட்டு வீட்டுக்கு வர, அவரது தாய் நிஜத்தில் குழம்பி, புலம்பி, ஊரைக் கூட்டி, மகள் மேல் தான் தவறு இருப்பது போல நடந்து கொள்கிறாள். இதனால் அப்பாவியான கங்கா வீட்டை விட்டு அவளது அண்ணன் குடும்பத்தால் விரட்டப்பட்டு, மாமா ஒருவரிடம் அம்மாவின் அறிவுரைப்படி தஞ்சமடைகிறாள். படிப்பை எந்தச் சூழலிலும் கைவிடாத கங்காவைப் படிப்பு காப்பாற்றுகிறது. படித்த உடன் அலுவலகம் ஒன்றில் நல்ல வேலையும் கிடைக்க, தாயை தன்னுடன் அழைத்துக் கொள்கிறாள். அலுவலகத்திலிருந்து டாக்ஸியில் ஒரு நாள் மாலை வீடு திரும்பும் வழியில் பத்திரிகை ஒன்றில் ‘அக்கினிப் பிரவேசம்’ என்ற கதையைப் படிக்கிறாள். அப்படியே அவள் வாழ்க்கையில் நடந்த கதை தான் அது.

ஆனால், ஒரு சின்ன திருப்பம். அதில் தாயாய் வரும் பெண் பாத்திரம், தனக்கு நேர்ந்ததை மகள் தனிமையில் சொன்னதும், கதவைச் சாத்திவிட்டு அவளை நெஞ்சோடு அணைத்துத் தேற்றுகிறது. மகளை அமரவைத்து தலைக்கு நீரூற்றி, தலை துவட்டி, “நீ சுத்தமாய்ட்டடி குழந்தை, தலைல நான் கொட்டினேனே, அது ஜலமில்லடி குழந்தை, நெருப்புன்னு நினைச்சிக்கோ. வாழை ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம். நான் சொல்றதை நம்பு குழந்தே… உனக்கு ஒண்ணும் நடக்கல, இது சத்தியம். தெருவுல நடந்து போறோம். கால்ல அசிங்கம் பட்டுடறது, காலையா வெட்டிப் போட்டுடறோம்? அதே காலைக் கழுவிண்டு பூஜையறைக்கும் போறோமே? சாமி வேண்டாம்னா விரட்டறார்? எல்லாம் மனசு தாண்டியம்மா காரணம்” என்று தேற்றி, அவளது நெற்றியில் விபூதியிட்டு துணிவு சொல்கிறாள் அந்தத் தாய். முத்தாய்ப்பாக, “இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்குடுடி” என்று மகளிடம் சத்தியமும் கேட்டுப் பெறுகிறாள் அந்தத் தாய்.

*கங்காவை அரவணைக்கும் தாய், சில நேரங்களில் சில மனிதர்கள்*

இன்று எத்தனை தாய்மார்களால் இப்படி ஒரு சூழலை இத்தனை லகுவாகக் கையாள முடியும்? 40 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் படைத்ததாக ஜெயகாந்தன் தன் கதையில் அறிமுகம் செய்யும் லைப்ரரியனாக வருகிறார் நடிகர் நாகேஷ். கங்காவுக்கு நேர்வதை நேரில் கண்டும் காப்பாற்ற வழியற்றுப் போகும் அவரது கல்லூரி லைப்ரரியன் மற்றும் எழுத்தாளரான ஆர்.கே. விஸ்வநாத சர்மா (நாகேஷ்), அவரை அதன்பின் காணாமல் தேடியலைகிறார். வீட்டை விட்டு விரட்டப்பட்ட கங்காவை நினைத்து மனம் வருந்தும் ஆர்.கே.வி, அவரைப் பற்றி ‘அக்கினிப் பிரவேசம்’ கதையை எழுதி பதிப்பிக்கிறார். மிக எளிய வாழ்க்கை வாழும் ஆர்.கே. விஸ்வநாதன், தன் மனைவியை எழுதத்தூண்டும் முற்போக்குவாதி. உரத்த சிந்தனையாளர். கங்காவுக்கு நேர்ந்ததை வெளிக்கொணர்கிறார். கங்காவின் வயதொத்த பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கை விதைக்கிறார்.

மகளிர் கல்லூரி ஒன்றில் மாணவிகள் மத்தியில் ஆர்.கே.வி முன்வைக்கும் கருத்துகளை இன்றையப் பெண்ணியவாதிகள்கூட சொல்ல சற்றே தயங்குவார்கள். “தவறு செய்த பெண்களை தாய்மார்கள் மறைத்துப் பாதுகாப்பது என்பது ஒழுக்கக்கேட்டை பிரச்சாரம் செய்வதல்லவா?” என்று கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவி கேள்வியெழுப்ப, அதற்கு ஆர்.கே.வியிடமிருந்து சுருக்கெனப் பதில் வருகிறது. “ஒரு வேசியை ஊர் மக்கள் கல்லால் அடித்தார்கள். உங்களில் யார் பாவம் செய்யாதவரோ, அவர் இவள் மீது முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன தேவதூதன், ஒழுக்கக்கேட்டையா பிரச்சாரம் செய்தான்? வகுப்புக் கலவரங்களின் போது கற்பழிக்கப்பட்ட பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்று இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார் ஒரு தேசத்தின் பிதா. அதுவும் அப்படிப்பட்ட பிரச்சாரம் தானோ?”

“அகலிகை எங்கே, இந்த அசடு எங்கே என்று கேட்கிறீர்களா? அகலிகை ஒரு ரிஷிபத்தினி. வேதகாலத்து ரிஷிபத்தினியே ஒரு இந்திரனின் மாயத்துக்கு மயங்கிவிட முடியுமென்றால், எனது ‘அவள்’ இந்தக் கலிகாலத்தில் சோரமே ஒரு தொழிலாகிப் போன சூழ்நிலையில், கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சங்கீதம், பத்திரிகை என்ற பெயரால் சகல அழுக்குகளும் விலை போகுமளவுக்கு நமது இனமே வீழ்ந்து கிடக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில், எனது ‘அவள்’ மயங்கிவிட்டது மன்னிக்க முடியாத குற்றமோ? அந்த அகலிகைக்கே சாப விமோசனம் உண்டென்றால், எனது ‘அவளுக்குக் கிடையாதோ?… வாழ்க்கை இலக்கியம் போலவே நமது வசதிக்காக, நமக்குப் பிடித்தது போலவே நின்றுவிடுவதில்லை” என்று தாயுமானவனாகி விசுவரூபம் எடுக்கிறார்.

*சில நேரங்களில் சில மனிதர்கள்- எழுத்தாளர் ஆர்.கே.வி.*

உண்மையில் கங்காவின் தாய் அவள் தாயல்ல. ஆர்.கே.வி தான் அவளது தாயாக நம் முன் நியாயம் கேட்கிறார். இந்த இடத்தில் தான் தவறிப் போகிறார் ‘பொன்மகள் வந்தாள்’ ஜோதியின் தாய். மகளைக் காத்து அரவணைக்க வேண்டிய தாய், ஆணவக் கொலையில் ஈடுபடும் குடும்பத்தின் சொல்லுக்கேற்ப மகளின் கடைசிச் சுவட்டைக்கூட அழித்தொழிப்பது என்ன வகை பாசம்? பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த மகளை தாயே உடைமையாகவும், அவளது பெண்மையை சாதியின் சின்னமாகவும் பார்ப்பது எவ்வளவு பெரிய அவலம்?

‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆர்.கே.வி. போல கணவனை இழந்த ஜோதிக்கு ஆதரவாக வந்து நிற்கிறார் ‘பெட்டிஷன்’ பெத்துராஜ் (இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ்). பாக்யராஜ் இது போன்ற பெண்ணிய சிந்தனை கொண்ட கதாபாத்திரத்தை ஏற்கனவே ‘விதி’ படத்தில் அருமையாகச் செய்திருப்பார். 1980களில் ‘விதி’ திரைப்படம் ஒரு பெரிய ‘கல்ட் கிளாசிக்’. சிற்றூர்களின் தேநீர்க்கடைகளில் அப்போது பாடல்களை விட, விதி படத்தின் கோர்ட் சீன்கள் தான் மீண்டும் மீண்டும் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு ஒலிபரப்பப்படும். அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வக்கீல் ‘சகுந்தலாதேவி’ (சுஜாதாவின் அட்டகாச பர்ஃபார்மன்ஸ் இந்தப் படத்தில் உண்டு) ஒரு தலைமுறைப் பெண்களுக்கு வழக்கறிஞர் படிப்பைத் தேர்ந்தெடுக்க பெரும் இன்ஸ்பிரேஷன்.

சிறு கதாபாத்திரம் என்றாலும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் போஸ்ட்மேனாக நடித்து இயக்கிக்கொண்டே ‘விதி’ நாயகி ராதா (பூர்ணிமா) பற்றி பெண் நிருபர் ஒருவருக்குப் பேட்டி தருவார் டைரக்டர் பாக்யராஜாக நடிக்கும் பாக்யராஜ். இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் கேட்காத கேள்வியாக ஆலமரத்தடிப் பஞ்சாயத்து ஒன்றில் “யாராவது ஒரு பத்தினி பெயர் சொல்லுங்க, நம்ம நாட்டுல நிறைய பத்தினி இருக்காங்கல்ல? அவங்க பேரைச் சொல்லுங்க?” என்று அவர் கேட்க, “கண்ணகி, சீதை, நளாயினி, சாவித்திரி, சதி அனுசுயா, மீராபாய்” என்று அத்தனை கற்பனைக் கதாபாத்திரங்களின் பெயர்களையும் ‘ஊர்ப் பெருசுகள்’ சொல்வார்கள். “பத்தினின்னு சொன்னதும் இத்தனை பேரைச் சொன்னீங்கல்ல? யாராவது ஒருத்தராவது உங்கம்மா பேரு, இல்ல உங்க சம்சாரத்துப் பேரைச் சொன்னீங்களா?” என்று நச்சென்று கேட்பார். “உங்கம்மா பத்தினி இல்லையா, இல்ல உங்க சம்சாரம் பத்தினி இல்லையா? உங்கம்மா மேல, உங்க சம்சாரத்து மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்ல, தான் எந்த தப்பும் செய்யலைன்னு இந்தப் பொண்ணு சொல்றதை எப்படி நம்பப் போறீங்க?” என்று விளாசுவார்.

இதுதான் உண்மை, எங்கோ புராணங்களில் கேட்ட பெண்களை கற்புக்கரசியாக, தெய்வமாகப் பார்க்கும் ஆண், தன்னை ஈன்றெடுத்து, ரத்தத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்த அன்னையையோ, தன் உயிர், உடல் மூச்சு என்று அனைத்திலும் பாதியாகிய மனைவியையோ, தான் தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தெடுத்த மகளையோ ஒரு நொடிகூட நம்புவதில்லை, அவளது ‘கற்பை’ கேள்விக்குட்படுத்தும் முதல் ஆண் – வீட்டிலுள்ள ஆண்தான். மகனோ, கணவனோ, தந்தையோ, ஆண் யாராக இருப்பினும், கற்பு என்று வந்துவிட்டால் சொந்த ரத்தத்தையும் சந்தேகிக்கிறான். ஆனால் இந்த ‘கற்பு’ என்ற வரையறைக்குள் ஆண் வருவதேயில்லை![பாக்யராஜ் நடித்த காட்சி- விதி](https://www.youtube.com/watch?v=8kSxNWoeX3Y)

இப்படி ஒரு காட்சியில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கும் பாக்யராஜ், அடுத்த காட்சியிலேயே, வேஷம் கலைத்த பாக்யராஜாகப் பேட்டி எடுக்கும் பெண்ணிடம், “ராதாவுக்கு வெற்றிங்கறது இந்த கேஸோட தீர்ப்பை மட்டும் வெச்சு கிடச்சுறப் போறதில்ல, என்னிக்காவது ஒரு நாள் அந்த ராஜா திருந்தி, இவகிட்ட மன்னிப்பு கேட்டு மனைவியா ஏத்துக்கணும். அன்னிக்குத் தான் உண்மையிலேயே அவ ஜெயிச்ச மாதிரி. பூட்டும், சாவியும் தனித்தனியா இருந்தா யாருக்கு என்ன புண்ணியம்? அது ரெண்டும் ஒண்ணா சேர்ந்தாத்தானே வீட்டுக்குப் பாதுகாப்பு? ராதாவுக்காக இல்லைன்னாலும் அவ வயித்துல ஒரு குழந்தை இருக்கு, நாளைக்கு ஒரு அப்பா பேரு அதுக்கு அவசியமா தேவைப்படுது. அதுக்காகத்தான் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேரணும்னு ஆசைப்படுறேன்” என்று ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வாங்கிய நல்ல பெயரை எல்லாம் நம்மிடம் கோட்டை விடுகிறார். இந்த ‘கெடுத்தவன் தான் கெட்டவளைக் கட்டிக்கணும்’ என்பதை தமிழ் சினிமா ஆதிகாலம் முதலாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

*விதி படத்தில் பாக்யராஜ்*

பாக்யராஜும் அதற்கு விதிவிலக்கல்ல. சம்பந்தப்பட்ட பெண் இந்தத் தாக்குதலால் எந்தவிதமான உளவியல் மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களை அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்பதை ஆணாதிக்க மனங்கள் ஒரு நொடி கூட சிந்திப்பதில்லை. தேவையற்ற கர்ப்பம் தொடங்கி, மனச்சிதைவு வரை வாழ்க்கை முழுக்க பெண்களுக்கு இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரும் ரணம். அதைக் கொஞ்சமும் உணராதது தமிழ்ச் சமூகச் சூழல். இந்த ஒரே ‘கெட்டவளை கெடுத்தவன் கட்டிக்கும்’ சென்டிமென்ட் கொண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படமான ‘புதிய பாதை’யைக் கொடுத்த இயக்குநர் ஆர். பார்த்திபனும் ‘முற்போக்கு’ சிந்தனையாளர் என்று அறியப்படுவதுதான் வேடிக்கை. இவரும் பாக்யராஜின் சீடர் என்பது கூடுதல் தகவல். ஆச்சரியம் என்னவென்றால், விதி படத்தின் டைகர் தயாநிதி (ஜெய்சங்கரின் மெமரபிள் ரோல் இது!) வழக்கறிஞர் பாத்திரத்தை ஒத்த பாத்திரம் பொன்மகள் வந்தாள் படத்தில் பார்த்திபனுக்கு உண்டு. அவர் கதையை அடுத்து பார்க்கலாம்.

“கட்டிப் பிடிக்கும்போது ஆம்பளையும் பொம்பளையும் ஒண்ணா சேந்துதான் கட்டிப்பிடிக்கிறோம், ஆனா கற்புன்னு வரும்போது ஆம்பளை மட்டும் காணாமப் போய்டுறான். என்னிக்கு அந்தக் கட்டுப்பாட்டுக்குள்ள அவனும் வர்றானோ அன்னிக்குத்தான் இந்த (பாலியல் வன்முறை) பிரச்சினை தீரும்” என்று விதி படத்தில் பிரச்சாரம் செய்கிறார் பாக்யராஜ். அதே எதிர்பார்ப்புடன் 40 ஆண்டுகளுக்குப் பிந்தைய பாக்யராஜ் கேரக்டர், துணிவுடன் ஜோதியையும், அவள் மகள் வெண்பாவையும் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்த்தால்… பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

டீக்குள் விழுந்த ஈக்காக டீக்கடைக்காரனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தரும் ‘போராளி’ பெத்துராஜ் (பாக்யராஜ்) தன் கண்முன் அழிந்துபோன ஜோதி குடும்பத்துக்கு உடனடியாக நியாயம் வாங்கித்தராமல் 15 ஆண்டுகள் ஹாயாக வெண்பா படித்து முடித்து வக்கீல் கோட் மாட்டும் வரை சும்மா இருக்கிறார். கோர்ட்டில் நீதிபதியை ‘மாமி’ என்று அழைப்பதிலும், பொய் சாட்சி சொல்ல வருபவனுக்கு ரூபாய் நோட்டைத் தூக்கிக் காண்பிக்கும் அறமற்ற செயலிலும் நம்மை நொந்து போக வைக்கிறார். ‘விதி’ பாக்யராஜை விட நூறு ஆண்டுகள் பின் தங்கிவிட்டிருக்கிறார். சோ சேட்!

படத்தில் பிராசிக்யூஷன் தரப்பு வக்கீலாகப் பணமும், செல்வாக்கும் படைத்த தியாகராஜனால் ‘கொண்டுவரப்படுகிறார்’ பார்த்திபன். என்னவோ செய்யப்போகிறார் போல என்று பார்த்தால், கொஞ்சம்கூட மூச்சிரைக்காமல் ஷட்டில் ஆடுகிறார். கோர்ட்டில் வாதிடுவதிலாவது ஆர்வத்தைத் தக்கவைப்பார் என்று பார்த்தால் ம்ம்ஹூம்ம்ம்… ஒன்றுமில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் வெள்ளைப் பேப்பரில் “றெக்கை” வரைந்து ஏஞ்சலை அடையாளம் கண்டுகொள்கிறார். பெண்ணுக்கு இப்படி பறக்கச் சுதந்திரம் தருவதாகச் சொல்லிக்கொள்ளும் பலர் வெற்றுப் பேப்பரில் பெண்ணைப் பறக்கவிடுபவர்கள்தான் போல.

படத்தில் 80களின் ஃபீலுக்காக பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஓய்வு பெற்ற நடிகர், இயக்குநர் கூட்டமே உண்டு. பாண்டியராஜன் பாவம். பிரதாப்புக்கு எடுபிடியாகவே படத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார். படத்தின் மிகப்பெரிய அபத்தம் கோர்ட் காட்சிகள். நீதிபதி முன்பே நின்றுகொண்டு உள்ளாடைகளைப் பற்றி நையாண்டி செய்யும் வழக்கறிஞர் தோன்றும் காட்சி எல்லாம் சொதப்பல்.

படத்தின் பெரும் பலமும் பலவீனமும் ஜோ. பலம் – அவரது நடிப்பு. பலவீனம் – அவரை ‘தமிழ்’ப்படுத்த வேண்டிய கட்டாயம் + அவரது துன்பத்தில் உழலும் கதாபாத்திரம். இரண்டாவது இன்னிங்க்ஸில் ஜோ நடிக்கும் படங்கள் எல்லாமே அவரை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ பெட்டிக்குள் அடைக்கப்பார்க்கும் இயந்திரங்கள் தான். 36 வயதினிலே தொடங்கி ராட்சசி வரை இந்த டிரெண்டு தொடர்கிறது. ஒன்பது கோடி ரூபாய் செலவு செய்து ஜோ (சக்திஜோதி) மதுரைப்பெண் என்று ‘ரிஜிஸ்டர்’ செய்யும் அரசியல் நமக்குப் புரியாமல் இல்லை. அரசியல் காய்களை அழகாக நகர்த்திக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஆனால் ரசிகன் தான் பாவம். வட இந்தியப் பெண் ஜோதி என்று கதையில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. பெத்துராஜின் வீட்டருகில் வசிக்கும் ஜோதி அழகாகத் தமிழ் பேசுகிறார், கடைக்குச் செல்கையில், அக்கம்பக்கத்தினருடன் என்று யாரிடமும் அவர் பேசாமல் இருந்திருக்கப் போவதில்லை என்பதால், அவர் சிறுமிகளைக் கொலை செய்த வட இந்தியப் பெண் என்று அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஒன்று போல சொல்வது எப்படி சாத்தியம்?

ஜோதியின் டைரி ஒன்றை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு ஆதாரம் என்று பாதிப்படம் வரை நகர்த்துகிறார் வெண்பா (ஜோ). அதை வாசிக்கிறார், அதில் என்ன இருக்கிறது, என்ன உள்வாங்கிக் கொள்கிறார் என்பது உண்மையில் நமக்குப் புரியவில்லை. “15 ஆண்டுகளாக இதற்குத்தான் காத்திருந்தேன்” என்று சொல்லி, தன் தாயைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வருகிறார் வெண்பா. ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள் எதையுமே செய்யாமல் நேரடியாக பெத்துராஜுடன் ஆட்டோவில் வந்து முதல் கேஸை எடுத்து ‘படுவிவரமாக’ வாதாடுவது நம்பும்படி இல்லை. தாய்க்காக இவ்வளவு சீறும் வெண்பா கதாபாத்திரம், இதுபோன்று அன்றாடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை எப்படி எளிதாகக் கடந்து வந்தார்?

பணபலமும், அரசியல் பலமும், செல்வாக்கும் கொண்ட பிரமாண்ட வில்லன்கள்தான் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இது போன்ற கதைகளில் சித்திரிக்கப்படுகிறார்கள். பாலியல் குற்றமிழைப்பது இதுபோன்ற பின்புலம் கொண்ட ‘பெரிய’ ஆள்கள், அவர்களது மகன்கள் என்று காலங்காலமாக இங்கு கற்பிக்கப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை? கதையில் சொல்லப்படுவது போல சின்னஞ்சிறு பிஞ்சுகளை இப்படிக்கையாள்வது உண்மையில் யாரென்றே தெரியாத அயல் மனிதர்களா? அவர்களது சதவிகிதம் அதிகமா அல்லது வீடுகளுக்குள் பசுத்தோல் போர்த்திய புலிகள் போல வலம் வரும் மாமன், சிற்றப்பன், பெரியப்பன், தாத்தன், நண்பன், ஆசிரியர் என்று சிறுமிகள் அன்றாடம் அறிந்து, தெரிந்து பழகிக்கொண்டிருக்கும் முகங்களா?

உங்கள் வீட்டுப் பெண்களிடம் பொறுமையாக அணுகிக்கேட்டுப் பாருங்கள் – இது போன்ற பாலியல் சீண்டல்களை எந்த வயதில் முதன்முறையாக எதிர்கொண்டார்கள், எப்படி எதிர்கொண்டார்கள், அவர்கள் குற்றவாளிகளை வீடுகளில் அம்பலப்படுத்தினார்களா, ஆம் என்றால் வீடும் குடும்பமும் அதை எவ்வாறு எதிர்கொண்டது என்று கேளுங்கள். பெண்கள் இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தால், உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பாலியல் சீண்டலை உறவுக்கார அல்லது அறிந்த ஆணிடம் சந்திக்கவில்லை என்று சொன்னால், நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை அல்லது சொல்ல விரும்பவில்லை, அந்தக் கொடூர பிற்காலத்தை திரும்பிக்கூடப் பார்க்க விரும்பவில்லை என்றே பொருள்!

இப்படியான காமக் கிறுக்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் பெண்கள்? மீண்டும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்கே போவோம். ‘கெட்டுப் போன’ கங்காவைப் படிக்க வைக்கும் உறவுக்கார மாமா – பல்போன கிழவன் (ஓய்.ஜி. பார்த்தசாரதி), கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் அவளிடம் தன் வேலையைக் காட்டுகிறான். வீட்டில் மனைவி இருக்கும்போதே, மகள் வயதையொத்த கங்காவை, அவள் பார்வை படும்போதே சீண்டிக்கொண்டிருக்கிறான். “நீ கெட்டுப்போனவள். யூ கேன் ஒன்லி பி அ கான்குபைன். நீ ஏன் என்னுடைய வைப்பாட்டியாக வாழக்கூடாது?” என்று நிர்பந்திக்கிறான். ஆட்டுக்குட்டியை ஆசையாய் வளர்த்து அதன் கழுத்தில் மாலையிட்டு கழுத்தில் கத்தி வைப்பவனுக்கும், இந்த மாமாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கூடவே “முடிந்தால் அவளைக் கெடுத்தவனைக் கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்தி வாழட்டும், பார்ப்போம்” என்று அவன் சவால்விட, கங்காவின் வாழ்க்கை தடம் மாறிப்போகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் சீண்டும் மாமாவை, கையில் பெல்ட்டை எடுத்து ஒரு நாள் கங்கா விளாச, பம்மிக்கொண்டுவிடுகிறான்.

*மாமாவை சமாளிக்கும் கங்கா- சில நேரங்களில் சில மனிதர்கள்*

இப்படி பெல்ட்டையும், கத்தியையும், செருப்பையும் கையில் சிறுவயதில் எடுத்த சிறுமிகளை உலகம் அறியவில்லை என்பதே நிஜம். குடும்பம் இந்தச் சீண்டல்களை, “மாமா பத்தி அப்படில்லாம் பேசாத… சே சே, பெரியப்பா அப்படி எல்லாம் இல்லை… நீ பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்க” என்று சொல்லி குழந்தைகளின் வாயை எத்தனை முறை அடைக்கிறது? “வேன் டிரைவர் அங்கிள் கிட்ட ஜாக்கிரதையா இரு, வாட்ச் மேன் பக்கம் போகாதே” என்று தெளிவாக சொல்லித்தரும் எத்தனை அம்மாக்கள், “மாமாவோ, சித்தப்பாவோ, பெரியப்பாவோ, அண்ணனோ, யாரோ… யாராக இருந்தாலும் உன்னை தேவையில்லாத இடத்தில் தொடவிடாதே” என்று சொல்கிறோமா? இதிலும் வர்க்க பேதம் எப்படி சாமர்த்தியமாக நுழைந்து கொள்கிறது?

இப்படி சிறுவயதில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தை வளர்ந்து எப்படியான வாழ்க்கையை வாழ்கிறது என்பதற்கு மோசமான உதாரணம், 80களின் இன்னொரு ஹிட் படமான ‘அவள் அப்படித்தான்’ கதாநாயகி மஞ்சு (ஸ்ரீப்ரியா). சிறு வயதில் தாய் தகாத உறவு கொள்வதைப் பார்ப்பது, மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவது என்று சிதைக்கப்பட்ட பால்யம் ஒரு பெண்ணை ‘உணர்வு ஊனமாக்கி’ விடுகிறது. அவளால் பிறிதொரு காதல் வயப்பட முடிவதேயில்லை. அவளால் யாரையும் எளிதில் நம்ப முடிவதில்லை. ரத்தமும் சதையுமாய் துள்ளத் துடிக்கக் கொல்வது மட்டும் கொலையல்ல. சக மனிதன் மேலான நம்பிக்கை என்ற பெரும் உணர்வைக் கொல்வதும் கொலைதான். பெண்ணுக்கு அந்த நம்பிக்கை சிதையும்போது அவள் தனி மரமாக நிற்கிறாள் அல்லது உள்ளுக்குள் ஊனமாகிப் போகிறாள்.

*அவள் அப்படித்தான்- மஞ்சு, அருண்*

‘அவள் அப்படித்தான்’ படத்தில் மஞ்சுவின் மேல் தீராக்காதல் கொண்டு அவளைத் தாங்கிப்பிடிக்கும் அருண் (கமல்ஹாசன்) கதாபாத்திரம் அருமையான படைப்பு. படத்தில் பெண்களைக் கருணையுடன், உள்ளார்ந்த அன்புடன் அணுகும் குறும்பட இயக்குநர் கதாபாத்திரம் அருண். உண்மையில் புரட்சிகரமானவன் அருண். “வாட் டு யூ திங்க் அபவுட் பிரீமரைட்டல் செக்ஸ் அண்டு லீகலைஸ்ட் அபார்ஷன்?” என்ற கேள்வியைக் கையில் கேமரா, மைக் சகிதமாக இளம்பெண்கள் சிலரிடம் கேட்கிறான் அருண். (இது உண்மையில் இயக்குநர் சி. ருத்ரையாவால், பொது மக்களிடம் கேட்டு பதில் பெறும் டாகுமென்டரி போல இயல்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்!) 1978ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது என்பது நமக்கு கொஞ்சம் திக் தான்! அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் துணிச்சலாக கேமராவில் முகம் காட்டி, “ஐ அக்ரீ வித் லீகலைஸ்ட் அபார்ஷன்” என்று சொல்கிறாள். இன்னொரு பெண், “ப்ரீ மரைட்டல் செக்ஸ் டிப்பெண்ட்ஸ் வேர் யு ஆர், இன் இண்டியா இட் இஸ் நாட் அக்செப்டட்” என்று பட்டென உடைத்துப் பேசுகிறார்.

அங்கு யாராவது அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண்கள் இருக்கிறார்களா என்று கேட்கிறான் அருண். ஒருமித்த குரலில் நோ என்று பதில் வருகிறது. அரசியலில் யாருக்கும் நம்பிக்கை இல்லையா அல்லது அதில் ஈடுபாடு இல்லையா என்று கேட்கிறான். “அதைப்பத்தி இந்த வயசுல நமக்கு எதுவும் தெரியாதே, இந்த வயசில வீ ஆர் நாட் பாதர்ட் அபவுட் தட்” என்று ஒரு பெண் பதில் சொல்கிறார். இந்தப் பெண்கள் அரசியல் பற்றி தெரியாதே என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில், இந்தியாவையே எமர்ஜென்சியில் ஆட்டிப்படைத்துவிட்டு, பிரதமர் பதவிக்கு வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார் இந்திரா காந்தி.

அடுத்த காட்சியில் மிகச் சாதாரணத் தோற்றமளிக்கும் நடுத்தர வயதுப் பெண்களுடன் அருணின் கேமரா உரையாடல் தொடர்கிறது. “உங்க கொள்ளுப் பாட்டி, பாட்டி காலத்தில்தான் அவங்களுக்கு ஓட்டுப் போட உரிமை வந்திருக்கு, இப்ப தான் பொம்பளைங்களுக்கு சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமா கிடைச்சிருக்கு. வேலைக்குப் போறாங்க. அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க, நல்லதா கெட்டதா?” என்ற அருணின் கேள்விக்கு, “நல்லது தான்” என்று பதில் வருகிறது. “நீங்கல்லாம் அடிமைகளாகவே இருந்திருக்கீங்க… உங்க தொழிலையும் எதையும் சொல்லல, ஆம்பளைங்க தான் பெருசா இருந்திருக்காங்க. நீங்க அவங்களுக்கு குழந்தைங்க பெத்துக்குடுக்குற மெஷினாத்தான் இருந்திருக்கீங்க. அதைப்பத்தி உங்களுக்கு என்ன தோணுது?” வெகு அழகாக இந்தக் கேள்வியை முன்வைக்கிறது அருண் கதாபாத்திரம்.

“பொம்பளைங்க கார் ஓட்றாங்க, ப்ளேன் ஓட்றாங்க. ஆபீஸ் போறாங்க. கைநிறைய சம்பாதிக்கிறாங்க…” என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பெண் இடைவெட்டுகிறார். “பேன்ட் போடுறாங்க, சர்ட் போடுறாங்க, ரோட்ல சுதந்திரமா போறாங்க” என்று விமர்சிக்கிறார். அது நல்லதா கெட்டதா என்ற அருணின் கேள்விக்கு அங்கு சண்டை மூள்கிறது. “பொம்பளைன்னா புடவை கட்டிக்கணும்” என்று ஒருவர் சொல்ல, அடுத்தவர், “அப்ப பொம்பளைன்னா வேலைக்குப் போவாத, சம்பாதிக்காத அடுப்பூதிட்டே இருக்கணுமா? ஒண்ணுமே தெரியாத இருப்பியா? உத்தியோகத்துக்கு போனா நல்ல பழக்கவழக்கங்களை கத்துக்கலாம்” என்று சீறுகிறார்.

ஆண்கள் மது அருந்துவதையும், பலதார மணம் புரிவதையும் பற்றிய கருத்தை அருண் கேட்கிறார். இதையெல்லாம் ஆண்கள் செய்யும்போது, இதை பெண்களாகிய தாங்கள் ஏன் செய்யக் கூடாது என்று அவர்களுக்குத் தோன்றியதுண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒருமித்த குரலில், “ஆமாம் தோணும், கண்டிப்பா தோணும், அப்பல்லாம் தலையெழுத்தேன்னு அடக்கிட்டு இருப்போம்” என்று சொல்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு பற்றிய கேள்விக்கு, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், அவர்களை வளர்த்தெடுப்பது சிரமம் என்பதால், அது தேவை என்று சொல்கிறார்கள். “பர்தா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? செல்லஃபன் போட்டு பெண்ணை மூடிவைப்பது போல இல்லையா?” என்ற கேள்விக்கு, “நோ, இட் இஸ் நாட் கன்டின்யூயிங் ஐ சப்போஸ்” என்று ஒரு சேலை கட்டிய, பொட்டிட்ட பெண் பதில் சொல்கிறார். கேமரா நகர்ந்து இஸ்லாமிய ஆண் ஒருவரது முதுகுக்குப் பின் ஒளிந்து கொள்ளும் பர்தா அணிந்த பெண்ணை எட்டிப் பார்க்க முயன்று தோற்கிறது. அந்தப் பெண்ணிடமிருந்து வெறும் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.

[அவள் அப்படித்தான் கிளைமாக்ஸ் காட்சி](https://www.youtube.com/watch?v=Hp3JvaFGAMA)

“பன்னீர்ப் புஷ்பங்களே…

பாஞ்சாலி வாழ்ந்த

பரிதாப வாழ்வை

பாராட்ட யாருமில்லை

நிஜ வாழ்க்கையிலே” என்று அந்தப் படத்தில் பாடும் முற்போக்குவாதி அருண், அப்பாவிடமிருந்து வரும் ஒரே கடிதத்துக்குக் கட்டுப்பட்டு, மஞ்சு தனக்கு இல்லை என்று தனக்குத் தானே முடிவு கட்டிக்கொள்கிறான்.

அப்பா பார்த்து வைத்த கட்டுப்பெட்டி பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறான். படத்தின் இறுதிக் காட்சியில், அருணின் மனைவியான சரிதாவிடம் மஞ்சு (ஸ்ரீப்ரியா), “வாட் டு யூ திங்க் அபவுட் விமென்ஸ் லிபரேஷன்?” என்று கேட்கிறார். கேள்வி புரியாத சரிதாவுக்கு அதை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்கிறான் அருண். “அதப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது” என்று அவர் பதில் சொல்கிறார். “அதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க” என்று பதில் சொல்லிவிட்டு செல்கிறார் மஞ்சு. “எரிந்து போன வீடு, முறிந்து போன உறவுகள், கலைந்து போனக் கனவுகள், சுமக்க முடியாத சோகங்கள், மீண்டும் ஒருமுறை மஞ்சு இறந்துபோனாள். இந்தச் சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால்தான் முடியும். அவள் பிறப்பாள், இறப்பாள்; இறப்பாள், பிறப்பாள்; அவள் அப்படித்தான்” என்ற விவரணையுடன் படம் முடியும்!

இப்படியான காதல் எதுவுமே இல்லாத ‘புனித’ பிம்பம் தான் பொன்மகள் வந்தாள் வெண்பாவுடையதும். தனக்கு எதிரான பாலியல் வன்முறையை 15 ஆண்டுகளாக இன்னும் நினைவில் வைத்திருந்து துன்பத்தில் உழன்று கொண்டிருப்பவளாக வெண்பாவைப் படம் சித்திரிக்கிறது. இது இளம் பெண் ஒருவருக்கு நடக்கும் அநியாயம். வாழ்வின் மிகச் சிறந்த இளம் பருவத்தில் சிறுவயதின் வடுவை சீழ்ப்பிடிக்க வைத்துக்கொண்டு சுற்றித்திரிவது பெரும் கொடுமை. இறந்து போன தாய்க்கு நீதி கேட்டுப் போராடும் வெண்பா, தனக்கான நீதியை யாரிடமிருந்து பெறப்போகிறார்?

வெண்பாவின் வலது புருவத்தில் பாலியல் துன்புறுத்தலின்போது ஏற்பட்ட தழும்பையும், சிறுவயதில் எப்போதோ அவளது அனுமதியின்றி நடந்த, அவளது கட்டுப்பாட்டுக்கு மீறிய பாலியல் வன்கொடுமையையும் ஆண்டுக்கணக்காக சுமந்து திரிவது, வருந்திக்கொண்டிருப்பது ஓர் ஆளுமையாகக் காட்டப்படும் வெண்பா கதாபாத்திரத்துக்கு அழகா என்ன? ‘அவள் அப்படித்தான்’ மஞ்சுவாகவா வாழ்க்கை முழுக்க தனியே நின்றுகொண்டிருக்கப் போகிறாள் அல்லது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கங்காவாக அத்துமீறியவனையே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளப் போகிறாளா… 40 ஆண்டுகளாக தமிழ் சினிமா தன் ‘புரட்சிகர’ப் பெண் கதாபாத்திரத்தை இப்படியே தான் ஆராதித்துக் கொண்டிருக்கப்போகிறதா… பெண்களின் இயற்கை உணர்வுகளான காதல், காமம் இவைகள் மரத்துப்போன, உணர்வு ஊனமுற்றவர்களாகவே தான் இந்த மூன்று கதாநாயகிகளையும் தமிழ் சினிமா சித்திரிக்கிறது.

சிறுவயதில் நேரும் பாலியல் வன்கொடுமையை வாழ்க்கை முழுக்க மூட்டை கட்டி, முள்ளாக மனத்தில் சுமந்துகொண்டிருப்பதா பெண்மையின் அடையாளம்? பெண்மை என்றாலே மீண்டெழுதல் இல்லையா? சிறுவயதில் விபத்தொன்று நிகழ்ந்தால், நினைவடுக்குகளில் அது பற்றிய சிந்தனை எங்கோ மறைந்து தானே போயிருக்கும்? ஏதோ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டால், நம்மைச் சுற்றியுள்ள குடும்பம் அதை எப்படிக் கையாள்கிறது? அதற்கான சிகிச்சை எடுக்கும்போது முழுக்குடும்பமும் நம்மை அருகிருந்து தாங்கிப் பிடித்துக்கொள்வதில்லையா? இந்தத் தெளிவு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் எனில் குடும்பங்களுக்கு இருக்கிறதா? விபத்து நடந்தால்கூட அதற்கான நீதியைத் தேடி குடும்பம் நீதிமன்ற வாசல் நாடுகிறது. ஆனால் குடும்பத்துக்குள்ளோ, வெளியிலோ சிறார் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கிடைக்க போக்சோ சட்டம் இருந்தாலும், எத்தனை குடும்பங்கள் சட்டத்தின் உதவியை நாடுகின்றன?

‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் கதை சொல்லப்பட்ட விதத்திலும், படமாக்கப்பட்ட விதத்திலும் பல குறைகள் இருக்கின்றன. ஆனால் சிறார் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆணவக்கொலை போன்ற பிறர் தொடத் தயங்கும் களங்களைப் படம் சொல்வதற்காக படக்குழுவினரைப் பாராட்டியே ஆக வேண்டும்!

((**கட்டுரையாளர் குறிப்பு**))

நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *