திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் *’இன்றுவரை கோயில்களில் தீண்டாமை தொடர்கிறது’* என்று குறிப்பிட்டு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்கிறது. தஞ்சாவூர் கோயிலைக் கட்ட ஆயிரக்கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும், சித்தாள்களும் வேலை பார்த்து இருப்பார்கள். இரவு பகலாக கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சிற்பி, 15 அடி உயரம் உள்ள கல்லின் மீது ஏறி அமர்ந்து அதை சிவலிங்கமாக செதுக்கி இருக்கிறார். இப்போது அந்த கல் சிவலிங்கம் ஆக்கப்பட்டு, கோவிலுக்குள் வைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டு விட்டது.
அவ்வாறு கும்பாபிஷேகம் முடிந்து விட்டால் சிவலிங்கத்தைக் கொத்திய சிற்பியால் அதனைத் தொட இயலாது. கோவிலைக் கட்டிய சித்தாளும், கொத்தனாரும், சிற்பிகளும், கோவிலுக்கு உள்ளே சென்று சிவனை கும்பிட இயலாது. இதை நான் தவறாகக் கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள். தஞ்சாவூர் கோவிலில் சிவலிங்கம் செய்த சிற்பியின் 12ஆம் தலைமுறையினர் ஒருவர் ‘இன்னும் அதே நிலைமை தான் தொடர்கிறது’ என்கிறார்.” என்று பேசினார்.
மேலும், **”உலகத்திலேயே கோடியில் கொட்டக்கூடிய திருப்பதி கோயிலிலும் இன்னும் தீண்டாமை உள்ளது. காட்பாடியிலிருந்து 48 நாட்கள் விரதம் இருந்து, திருப்பதி கோயிலுக்கு நடந்தே ஒரு ஏழை பக்தன் செல்கிறான். நான்கு நாட்கள் போராடி, நீண்டவரிசையில் காத்திருந்து பின்னர் தான் அவன் சாமியை தரிசனம் செய்கிறான். அப்போதும் பெரிய மூங்கில் குச்சியை வைத்துக் கொண்டு ‘ஜரகண்டி.. ஜரகண்டி’ என அவனை அடித்து விரட்டுகிறார்கள்.**
**அதுவே ஒரு பணக்காரன், மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கு சென்று, விடுதி எடுத்து ஒரு அறையில் தங்கி, மதுபோதையில் சந்தோஷமாக இருந்து விட்டு, காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் சென்றால், அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது”** என்று கூறியிருந்தார்.
அவர் பேசிய வீடியோ சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சிவக்குமார் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அதில், “தமிழ் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார் திருப்பதி கோயில் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை தமிழ்மாயன் என்பவர் தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் சிவக்குமாரின் பேச்சு, உலகம் முழுவதும் உள்ள பல கோடி ஏழுமலையான் பக்தர்களுக்கும் தேவஸ்தானத்தின் பெருமைக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திருமலை 2ஆவது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”