சினிமாவாகும் முதல்வர்களின் வாழ்க்கை வரலாறு!
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான யாத்ரா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அந்தப் படம் உருவானது.
அதைத் தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘ஒன்’ என்கிற படம் எடுக்கப்பட்டது.
சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கும் படத்தில் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். அவருடன் சீனிவாசன், ஜோஜோ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏப்ரல் 27ஆம் தேதி, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படம் கேரள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.அதன்பின், கேரளா முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைத் தமிழிலும் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
அதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறது தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு சொந்தமான குடும்ப நிறுவனம். ஆம், இந்தப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம். தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறந்தவுடன் பொருத்தமான நாளில் வெளியிடப்படும் என்கிறார்கள். இந்தப் படத்தின் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.
இதேபோல ஆந்திர, கேரள மாநில முதல்வர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சினிமா எடுக்கப்பட்ட நிலையில், அடுத்து தமிழக முன்னாள் முதல்வரான கலைஞர், அதன் பின் தற்போதைய முதல்வரான ஸ்டாலின் ஆகியோரை வைத்தும் சினிமாக்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் தமிழ் திரை வட்டாரத்தில்.
**-இராமானுஜம்**
�,”