கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா கலைஞர்களின் கனவு. மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் முயற்சி செய்தார். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதேபோன்று மதுரையை கதைகளமாக கொண்ட மருதநாயகம் படத்தை கமல்ஹாசன் நடித்து தயாரிக்க தொடங்கிய படம் நிதிப் பிரச்சினையால் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை தமிழரான சுபாஷ்கரன் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பல்வேறு இடையூறு, இயற்கை தடைகளை எதிர்கொண்டு ஒரு வழியாக முடிந்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபாஷ்கரன் அல்லிராஜா பிறந்த தினத்தையொட்டி 2.03.2022 அன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியையும் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களின் போஸ்டர்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. இதற்கான, படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், ஊட்டி எனப் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. படத்தின் முதல் பாகம் 2022 கோடை விடுமுறையில் வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ‘பொன்னியின் செல்வன்’ வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், இரண்டாம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் முதல் பாகத்துக்கான டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதால், இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. வெளியீட்டு தேதி அறிவிப்புடன், வெளியிடப்பட்ட புகைப்படங்கள் பொன்னியின் செல்வன் படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்கிற ஆவலை, வயது வித்தியாசம் இன்றி ஏற்படுத்தியிருக்கிறது.
**-இராமானுஜம்**