சமூகவலைதள பயன்பாடு பற்றி பேசும் ‘பயணிகள் கவனிக்கவும்’!

Published On:

| By admin

‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் பயணிகள் கவனிக்கவும்.

மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இத்திரைப்படம் இன்று(ஏப்ரல் 29) வெளியாக இருக்கிறது.

இதையொட்டி இந்தப் படம் திரையுலக பிரபலங்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
படத்தை பார்வையிட்ட அனைவரும் சமூக வலைதளம் குறித்த சரியான பார்வையை மொபைல் பயன்படுத்தும் அனைவருக்கும் திரைப்படம் வழங்கியிருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

நடிகர் சூரி படம் குறித்துப் பேசுகையில், இந்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். ஒரு நல்ல படத்தை பார்த்த சந்தோசம் என் மனதில் இப்போது இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதை இந்தப் படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… அல்லது அது குறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாகப் பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக் காட்ட இந்த ஒரு படம் போதும்.

சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். நான்கு பேருக்கு முன்னால் நன்றாக வாழ வேண்டும் என்பதைவிட நான்கு செல்போன்களுக்கு இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இதை தெளிவாக சொல்லியிருக்கும் படம்தான் இந்த ‘பயணிகள் கவனிக்கவும்’.

பொதுவாக பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதோ அந்தப் படத்தை ரீமேக் செய்வதுதான் சரி. அந்த வகையில் சமூகத்திற்கு நலன் பயக்கும் தரமான படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தைத் தயாரித்த நண்பர் விஜய், இயக்கிய சக்திவேல் மற்றும் படக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.என்னுடைய பங்காளி, நண்பர் விதார்த் படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார். பேசாமல், தன்னுடைய உடல் மொழியால் ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். சிரிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்” என்றார்.

**-அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share