இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது என இயக்குநர் சக்திவேல் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகனும் திரைப்படத் துறையில் இருப்பவருமான சூர்யா பாலகுமாரன், இதே பெயரில் ஒரு திரைக்கதை அமைத்திருப்பதாகவும் அதைப் படமாக எடுக்கவிருப்பதாகவும் கூறியிருப்பதோடு இத்தலைப்பைப் பயன்படுத்தக் கூடாதென எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மீறிப் பயன்படுத்தினால் சட்டரீதியாக அதை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்….
“பயணிகள் கவனிக்கவும் என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு மிகச்சிறந்த புத்தகம். It is easily one of his best. Airport கதைக்களம். விருது வாங்கிய புத்தகம். அப்பாவின் உழைப்பு, ஒவ்வொரு நாளும் விமான நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் பேசி பழகி உருவாக்கிய படைப்பு. இதைப் படமாக்க வேண்டுமென்பது எனது கனவு. முன்பு இட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டது போல, அப்பா பாலகுமாரன் எழுதிய அனைத்து படைப்புகளின் சம்பந்தமான காப்பிரைட்ஸ் , சட்டப்படி என்னுடைய பொறுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளேன். அது நாளிதழிலும் செய்தியாக வந்தது. என்னுடைய சுய நினைவுக்குத் தெரிந்து இந்த டைட்டிலை எங்கள் படத்துக்கு வைத்துக் கொள்ளலாமா என்று என்னிடமோ, எங்கள் குடும்பத்தாரிடமோ யாரும் கேட்கவில்லை. ஒரு கர்டஸி கால்? ஒரு கடிதம்? சிரித்த முகத்துடன் ஒரு விண்ணப்பம்? எதுவும் இல்லை. மிகவும் நெருக்கமான பலர் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும் என்னிடம் இதைப் பற்றி பேசவில்லை.
சப்பகட்டு கட்டாத… அதெல்லாம் செல்ஃபே எடுக்காது…பயணிகள் கவனிக்கவும் என்பது ஒரு பொதுச்சொல் என்று மல்லுகட்டினால், இந்தப் பொய் எத்தனை பெரியது என்று சொல்பவர்களுக்கே தெரியும்.
சற்று நாட்கள் முன்னால் வெளிவந்த “சில நே… சில ம…” படத்திற்கும் அனுமதியில்லாமல் படத் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன். பின் நடிகர் ஒருவர் எழுத்தாளரின் குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டதால் அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். சில நே… சில ம… பொதுச் சொல்லா? நாளை வேள்பாரி என்ற தலைப்பை யாருக்கும் தெரியாமல் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு, என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாமா? மனசாட்சி தடை சொல்லாதா? சுட்டெரிக்காதா? (எழுத்தாளர்கள் கவனிக்கவும்).
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் மிகவும் பிரபலமான ஒரு படைப்பு,
1993 ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து அன்று முதல் இன்று வரை பத்து பதிப்புகளுக்கு மேல் வந்த ஒரு சக்ஸஸ்ஃபுல் புத்தகம். இதை நானும் எனது நண்பர்களும் சீன் வாரியாக பிரித்து, வரி வரியாக வசனங்களாக மார்க் செய்து, கதாபாத்திரங்களாகப் பிரித்து அவர்களுக்கு வடிவம் கொடுத்து வைத்துள்ளோம். என்றோ ஒரு நாள் உயிர் வரும் என்ற கனவுடன். பாலாவின் “பயணிகள் கவனிக்கவும்” என்னுடன் சேர்ந்து என் கனவுகளுடன் சேர்ந்து நிச்சயமாக வளரும், ஒரு நாள் வெளிவரும். ஆனால் அந்த கனவுப்படைப்புக்கு, அந்த திரைப்படத்திற்கு இப்பொழுது என்ன பெயர் வைப்பது? யார் கேட்பினும் பதில் கிட்டுமா?
இது மலையாள படத்தின் ரீமேக் என்று தெரியவந்தது. இருப்பினும் இந்த டைட்டிலை உங்களின் படத்திற்கு வைப்பதற்கு என்ன காரணம்? விளக்கம் கிடைக்குமா? பெரிய நடிகர் பேசுவாரா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
**-இராமானுஜம்**