ஃப்ரீ டிக்கெட் கொடுப்பேன்: அரசுக்கு எதிராக பவன் கல்யாண்

Published On:

| By Balaji

ஆந்திர மாநிலத்தில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது அந்த மாநில அரசு. அதனால் டிக்கெட் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாகப் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடும் போது அதற்கான முதலீட்டை பெற நீண்ட நாட்களாகும்.

தெலுங்கில் டிசம்பர் 17 முதல் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெளிவர உள்ளன. டிக்கெட் விலை கட்டுப்பாட்டால் அப்படங்களின் வசூல் வெகுவாக பாதிக்கப்படும். இதனிடையே, சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “என்னுடைய படங்களைக் குறி வைத்துத்தான் மாநில அரசு டிக்கெட் கட்டணங்களைக் குறைத்துள்ளது. என்னுடைய படங்களைத் திரையிட அரசு தடுத்து நிறுத்தினால் நான் பயப்படவும் மாட்டேன், பின் வாங்கவும் மாட்டேன். நிலைமை இன்னும் மோசமாகப் போனால், என்னுடைய படங்களை மக்களுக்கு இலவசமாகக் காட்டவும் தயங்க மாட்டேன்,” என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.

மேலும், டிக்கெட் விலை, வசூலில் வெளிப்படைத்தன்மை இல்லை என அரசு குற்றம் சாட்டுகிறது. மது விலைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் அந்த வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுகிறதா என அரசை நான் கேட்கிறேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பவன் கல்யாண் நடித்துள்ள ‘பீம்லா நாயக்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share