தனுஷ் கதாநாயகனாக நடித்து செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படத்தில் இருந்து ‘மொரட்டுத் தமிழன்’ பாடல் வெளியாகியுள்ளது.
அசுரன், எனை நோக்கிப்பாயும் தோட்டா திரைப்படங்களுக்குப் பிறகு தென்தமிழகத்தின் மண்வாசனை மாறாத கிராமத்துக் கதையில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் பட்டாஸ். பொங்கல் ரிலீசாக ஜனவரி 16-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அப்பா-மகன் என்று இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சினேகாவும், மகன் பாத்திரத்திற்கு ஜோடியாக, நோட்டா திரைப்படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சடாவும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் ‘சில் ப்ரோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் இன்று(டிசம்பர் 21), பட்டாஸ் படத்திலிருந்து மொரட்டுத் தமிழன் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கும் இந்தப்பாடலை விவேக் சிவா மற்றும் மெருன் சாலமன் பாடியுள்ளனர்.
தமிழரின் வீரத்தையும், புகழையும் பறைசாற்றும் விதமாக முரட்டுத் தமிழன் பாடல் அமைந்துள்ளது.
*திமி திமி திமிறடிக்குதா…?*
*பட பட பட வெடிக்குதா…?*
*வா, நர நரம்புகள் புடைக்குதா…?*
*எதிரிய வச்சு பொளக்குதா…?*
*வீரம் எங்க வரமா, புலியத் துரத்தும் மொறமா…?*
*கருணை, கர்வம் இரண்டும் கலந்த மொரட்டுத் தமிழன் டா…..*
எனப் பாடலின் ஆரம்பவரிகள் அமைந்துள்ளது. பாடல் முழுவதும் வீரத்தமிழர்களின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது. இந்த மொரட்டுத் தமிழன் பாடலைப்பாடியிருக்கும் விவேக் சிவா மற்றும் மெருன் சாலமன் பட்டாஸ் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
�,”