இளம் இயக்குநர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாகிவிட்டது. முன்னணி ஹீரோக்களின் விருப்பத் தேர்வாகவும் இளம் இயக்குநர்களே இருக்கிறார்கள். அப்படி, தமிழ் சினிமாவின் மிக முக்கிய இளம் இயக்குநர் பா.ரஞ்சித்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, துஷாரா, ஜான் கொக்கன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையரங்கிற்கு திட்டமிட்டு, ஓடிடிக்கு வந்துசேர்ந்த சார்பட்டா பரம்பரையினர் மீண்டும் திரையரங்கிற்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பா.ரஞ்சித்தின் புதிய படம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. நடிகர் விக்ரமை இயக்க தயாராகி வருகிறாராம் பா.ரஞ்சித். சார்பட்டா படங்களுக்கு முன்பே விக்ரமைச் சந்தித்து கதையொன்றை கூறியிருந்தாராம் ரஞ்சித். அதன்பிறகு, இருவருமே வேறு வேறு படங்களில் பிஸியாகிவிட்டனர்.
சார்பட்டா படம் பார்த்துவிட்டு ரஞ்சித்தை அழைத்திருக்கிறார் விக்ரம். கதையிருந்தால் சொல்லுங்கள்; படம் பண்ணலாம் என்றிருக்கிறார். உடனடியாக, ரஞ்சித்தும் சம்மதம் கூறியதாகத் தெரிகிறது.
உடனடியாக சாத்தியமா? சார்பட்டா பரம்பரை முடிந்த கையோடு ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ படத்தைத் தொடங்கிவிட்டார் பா.ரஞ்சித். ஷார்ட் டைமில் எடுத்து முடிக்கக் கூடிய ரொமாண்டிக் ஜானர் படம்.
அதுபோல, சியான் 60யை முடித்துவிட்டார் விக்ரம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா ஷூட்டிங் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிகிறது. அதோடு, பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இன்னும் 10 நாட்கள் கால்ஷீட் இருக்கிறது.
ஆக, கோப்ரா, பொன்னியின் செல்வனை விக்ரம் முடித்துவிட்டு வரவும், நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தை ரஞ்சித் முடிக்கவும் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
கூடுதல் தகவலாக, விக்ரம் – பா.ரஞ்சித் படத்தை ஸ்டூடியோ க்ரீன் படம் தயாரிக்க முன்வருகிறதாம். முன்னதாக, ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தைத் தயாரித்த நிறுவனமென்பது நினைவுகூரத்தக்கது.
**- ஆதினி**
�,