cபோலீஸுடன் அஜித்: இது சோஷியல் சர்வீஸ்!

entertainment

நடிகர் அஜித் குமார் ஆளில்லா விமானத்தை பரிசோதித்துப் பார்க்கும் சில படங்கள், அவரது ரசிகர்களால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அஜித்துக்கு விமானம் ஓட்டக்கூடிய பைலட் லைசன்ஸ் இருப்பதையும், ஆளில்லா குட்டி விமானங்களை பரிசோதித்துப் பார்ப்பதில் அவர் ஆர்வம் காட்டுவதையும் வைத்து, திருப்போரூர் அருகே நடைபெற்ற ஆளில்லா விமானம் ஓட்டும் பயிற்சியை சிலாகித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால், இது அதையும் தாண்டிய சில முக்கிய அம்சங்களைக் கொண்ட பயிற்சி.

காவல் துறையினருடன் அஜித் பயிற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரித்தபோது “அஜித்துடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள். இளம் காவல் வீரர்கள் பலருக்கும், ஆளில்லா குட்டி விமானத்தை இயக்குவது எப்படி என்பது குறித்து நீண்ட பயிற்சியினை அளித்திருக்கிறார் அஜித். இந்தப் பயிற்சி சாதாரணமாக நண்பர்களின் மூலமாக அறிந்தவர்களிடமிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது கிடையாது. உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்றது” என்று கூறுகின்றனர் அந்தப் பயிற்சியில் உடனிருந்தவர்கள்.

அஜித்தைப் பொறுத்தவரையில், ஆளில்லா விமானங்களை இயக்குவதென்பது அவரது நீண்ட நாள் விருப்பம். விபத்தின் காரணமாக, ரேஸில் ஈடுபடக்கூடாது என்று கூறிவிட்டபிறகு தனது முழு கவனத்தையும் ஆளில்லா விமானங்களை பரிசோதிப்பதிலும், இயக்கிப் பார்ப்பதிலும் ஈடுபடுத்தத் தொடங்கினார் அஜித்.

கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அஜித்தை வழிகாட்டியாகக் கொண்டு உருவாக்கிய ‘ஏர் டாக்சி’ என்ற ஆளில்லா ஆம்புலன்ஸ் விமானத்தை காட்சிக்கு வைத்திருந்தனர் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள். இது பல்வேறு முதலீட்டாளர்களை மட்டுமில்லாமல் அரசை வழிநடத்தும் அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கவனத்தையும் பெற்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டே போலீஸ்காரர்களுக்கு ஆளில்லா விமானத்தை இயக்கும் பயிற்சியளிக்க அஜித்திடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. போலீஸ் கையில் ஆளில்லா விமானம் என்பது பலரையும் ஆச்சர்யமடைய வைத்திருக்கிறது. ஆனால், தமிழக போலீஸ் இந்த டெக்னாலஜிக்களை எப்போதோ பயன்படுத்திவிட்டது.

2014ஆம் ஆண்டு சிறுசேரியிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்ற இளம்பெண்ணை, வடநாட்டு வாலிபர்கள் சிலர் வழிமறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவத்தின் விசாரணையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சம்பவம் நடைபெற்ற இடத்தினை ஆராய்ந்தது தமிழக போலீஸ்.

குற்றம் நடைபெற்ற இடத்தினை ஆளில்லா விமானம் மூலம் படம்பிடித்து, அதன்மூலம் குற்றவாளி தப்பிச் சென்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்னவென்பதை ஆராய்ந்து விசாரணையின் அடுத்த கட்டத்தைப் பற்றிய முடிவெடுக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் தற்போது நடைபெறும் மிகப்பெரிய கூட்டங்கள் மற்றும் பேரணிகளைக் கூட ஆளில்லா விமானங்கள் மூலமாகவே போலீஸார் கண்காணிக்கின்றனர். சமீபத்தில் எதிர்க்கட்சியான திமுக நடத்திய CAA எதிர்ப்புப் பேரணியிலும் நான்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தினார்கள்.

முக்கியமான பல பயன்பாடுகளைப் பெற்றுள்ள இந்த ஆளில்லா விமானங்கள், தொழில்நுட்பமும், குற்றங்களும் பெருகி வரும் இந்த காலத்தில் போலீஸுக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடியவையாக இருப்பதால் அஜித் மிக ஆர்வமாக முன்வந்து இந்த பயிற்சியை முடித்துக்கொடுத்திருக்கிறார். �,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *