உஷா பாரதி
*கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது*
*காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது…*
*வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்*
*பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு*
காதல் காட்டாற்று வெள்ளத்துக்கு ஒப்பானது. காதல் புகுந்த மனம், அதன் வழிதேடும் காமம், காமம் தீர்ந்தபின்பு வரும் புரிதலுடன்கூடிய நேசம் என்று பல்வேறு கோணங்களில் நமக்குள் ஓராயிரம் செய்திகளை ஒப்புவித்துப் போகிறது காதல். அதேபோல், **இருபதுக்கும் இருபதுக்கும் காதல் வந்தா சிக்கல் இல்லை. ஐம்பதில துணை தேடறது தப்பு இல்லனு சொல்லும் சமூகம், இருபதும் நாற்பதும் இணைஞ்சா புருவம் உயர்த்துகிறது. முகம் சுளிக்கிறது.**
இந்தப் பாடல், கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆண் , இளம்பெண்ணின் மீது ஈர்ப்புக்குள்ளாவதால் பாடும் பாட்டு. **அந்த காலகட்டத்தில், எவருமே சொல்லாத ஒரு முயற்சிதான் முதல் மரியாதை.** திரும்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடையும், சிரிப்பும், ராதாவின் எதுகை, மோனை வசனங்களையும் பேசாதவங்களே இல்லைன்னு சொல்லலாம்.
**
முதல் மரியாதை என்ன சொல்கிறது?
**
ஊருக்குள்ளே மதிப்புமிக்க ஊர் பெரியவருக்கும், அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்கவந்த பரிசல்காரிக்கும் நடுவே ஏற்படுகிற நட்பும் பிரியமும் பேரன்பும் காதலாக மாறுகிறது. ஊர்ப் பெரியவரை மதிக்காத மனைவி, அவரது கடந்தகால உறவில் பிறந்த பெண்ணை தன் பெண்ணாக வளர்த்த ஊர் பெரியவர். கடந்தகால காதலன் அந்தப் பெரியவரின் மனைவியைத் தேடிவர, அது அவருக்கே களங்கமாகி விடுமோ என்பதால் அவரைக் கொன்று சிறை செல்லும் பரிசல்காரி குயிலி என்பதாக கதை நகரும்.
இந்தப் படத்தில், சில இடங்களில் சினிமாவுக்கே உரிய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது உண்மைதான். அதே நேரத்தில், ஆண் – பெண் உறவுகள் மற்றும் அது குறித்த பார்வைகளில் தனிநபர் உறவுசார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த இருவேறு பரிமாணங்களை இந்தப் படம் நம் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறது என்றால் அதுவும் மிகையாகாது.
இந்தப் படத்திலும் சில அடிப்படையான கேள்விகள் நமக்குள் எழுகிறது. வளர்த்த மாமனுக்கு நன்றிக்கடனாக அவரது மகளை திருமணம் செய்து கொள்ளும் ஊர் பெரியவர், தனது மனைவியின் மகளை ஏற்றுக்கொண்ட அவருக்கு அவரை மட்டும் மனைவியாக ஏற்க முடியவில்லை. மேலோட்டமா பார்க்கும்போது, இத்தனை கொடுமைக்கார பொம்பளைய எவந்தான் புருஷனா ஏத்துப்பான்? அப்படின்னுதான் தோணும். ஆனால், பருவ வயது மட்டுமின்றி எந்தவொரு வயதிலும் ஆண் – பெண் ஈர்ப்பு என்பது இயல்பு. **பெரியாரின் வார்த்தைகளில் சொல்லணும்னா கர்ப்பபைன்னு ஒண்ணு இருக்கறதால பெண்கள் இதில் கூடுதல் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கு.** அந்த கர்ப்பப்பை இல்லாததாலேயே ஆண்களால இதிலிருந்து எளிதில் தப்பிச்சு போயிட முடியுது.
இந்தப் படத்தில், அந்த வயது முதிர்ந்த ஆணின் காதலை, ஈர்ப்பை நாம் கொண்டாடுகிறோம் ஆனால், பேருக்குத்தான் இந்த உறவு. ஊருக்காகத்தான் இப்படியோர் இணைப்பு. குடும்ப மானம் காக்கத்தான் இந்தப் பிணைப்பு என்பதாக தனது மனைவியுடன் அவருக்கு இருக்கும் உறவை கேள்வி கேட்க மறுக்கிறோம். தன்னோட மாமாவுக்குக் கொடுத்த வாக்கிற்காக ஒரு பொண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த உறவுக்கான எந்தவொரு அடிப்படை தேவைகளையும் அவளுக்கு அவன் பூர்த்தி செய்வதில்லை என்பது எப்படி நியாயமாகும்? **எப்பவும் சிடுசிடுன்னு எல்லாரையும் விட்டேத்தியா பார்ப்பதாக சித்திரிக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையை, இயல்பான வாழ்க்கை/காதல் உறவு மறுக்கப்பட்டு மன பாதிப்புக்கு ஆளான மன நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.**
பருவத்தின் தேடலில் ஒருவனுடன் ஈர்க்கப்பட்டு, அதனால் கருதரித்து தாய்மை அடைந்த ஒரு பெண் காலத்துக்கும் குடும்பத்திற்குள் தன்னந்தனியாளா இருக்கணும். அதுவே அவளுக்கான தண்டனை என்பதான சித்திரிப்பு நிச்சயமாக சரியானது இல்லைங்கறதுதான் என்னோட கருத்து. அப்படி ஓர் உறவுக்குள்ள அந்தப் பெண் இருக்கணுங்கற எந்தத் தேவையும் இல்லை.
இந்தப் படத்தில் இரண்டு வசனங்கள் என்னை யோசிக்க வைக்கும்.
“எல்லாரும் கேட்டுக்குங்க… ஆமா அவளை வச்சிருக்கேன்…” என உரத்தகுரலில் அந்த ஆண் அவரது மனைவியிடமும் அவரது உறவினர்களிடமும் கூறுவார். தனது குடும்ப கவுரவத்திற்காக, தனது அனைத்து உணர்வுகளையும் புதைத்துவிட்டு தாலி கட்டினவனோட காலத்துக்கும் இருக்கும் மனைவியால இந்த மாதிரி எப்பவும் சொல்ல முடியறதில்ல. ஆனால், நிலவும் இந்த சமூகத்தின் வரையறைக்குள் “தப்பானவளா” பார்க்கப்படும் அந்தப் பெண்ணை திருமணம் செய்ததாலேயே அந்த ஆண்மகன் இன்னொரு பெண்ணை வச்சிருக்கேன் என்று இயல்பில் சொல்ல முடிகிறது என்பது ஆணாதிக்கத்தின் உச்சம்.
அதேபோல, பஞ்சம் பொழைக்க வந்தவளுக்கு பரம்பரை கவுரவத்தை பத்தி என்ன தெரியும் என்று ஊர் பெரியவரான அந்த ஆண் கேட்க, ஒன் பரம்பரை கவுரவம் நீ புடிச்சிகிட்டு இருக்கற கவுத்தலதான் இருக்குதுன்னா… **அதை விட்டுட்டு உன் கவுரவத்தை பார்த்துக்கோயா என்று அந்த இளம் பெண் கூறுவார். உண்மையில், சமூகத்தின் வறட்டு கவுரவத்திற்கான சாட்டையடிதான் அந்த வார்த்தைகள்.**
படத்தின் காதல், ஈர்ப்பு, சமூக காரணிகள் அழகாக வெளிப்பட்டிருந்தாலும், ஒரு பெண்ணின் உணர்வுகள், அவளுக்கான காதல், ஊடாடல்கள் என அனைத்தையும் ஆண்வழிப் பார்வையில் பார்ப்பது, நகர்த்துவது முறையா? இதுதான் இன்றைக்கான சமூக விதியாகவே மாறிப்போனது என்பது எந்த அளவுக்கு சரியா இருக்க முடியும் என்ற கேள்வியையும் கேட்காமல் இருக்க முடியவில்லை. அதேபோல, அவரது மனைவியைப் பார்க்கும்போதெல்லாம், சமூக கட்டுகளுக்குள் சிக்கி, நமக்கான வெளியை தொலைத்து ஆசையற்று இருக்கணுங்கற எந்த தேவையும் நமக்கு இல்லை என்பதை பெண்கள் உணரணும் என்று உரக்க சொல்லத் தோணுது.
**இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த சில வரிகள்**
**
கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது…
**
**
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
**
**
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
**
**
கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது…
**
**தாளாம தான் தள்ளி நிக்கிறேன் பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது**
**
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது புத்தி கேட்ட தேசம் பொடி வெச்சு பேசும்
**
**
சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்
**
**
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
**
**
கட்டுரையாளர் குறிப்பு
**
**
உஷா பாரதி
**
ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.
[பாடலதிகாரம் 4: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி!](https://minnambalam.com/entertainment/2020/10/04/4/padaladhikaram-4)
�,”