கே.எஸ்.ரவிக்குமார்- ரஜினி கூட்டணியில் ‘படையப்பா 2’ ?

Published On:

| By admin

நெல்சன் திலீப்குமாருடன் தன்னுடைய 169வது படத்திற்கு பிறகு ரஜினியின் 170வது படம் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2021வது வருடம் ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என பல நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருந்த படம் ‘அண்ணாத்த’. விமர்சன ரீதியாக படம் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியது.

இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினி அடுத்து எந்த இயக்குநருடன் இணைய இருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனது 169வது படத்தை அறிவித்தார். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ பட வெற்றிகளுக்கு பிறகு நெல்சன் தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினி – நெல்சன் கூட்டணி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘பீஸ்ட்’ படம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரலில் வெளியான பின்பு ரஜினி- நெல்சன் படப்பிடிப்பு மே மாதம் பூஜையுடன் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 1999ஆம் வருடம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘படையப்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க, தற்போது ரஜினியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனே நடிக்கவுள்ளார். ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நெல்சன் படத்திற்கு பிறகு ரவிக்குமார் -ரஜினி இணைந்துள்ளதால், ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share