சென்னையில் நடக்கும் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்!

entertainment

வழக்கமான சினிமாக்களைத் தவிர்த்து பரிசோதனை முயற்சியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் இயக்குநர் பார்த்திபன். நடிகராக ஒரு பக்கம் அசத்தி வந்தாலும், இயக்குநராக இவரின் முயற்சிகள் கொஞ்சம் புதுமையாக இருக்கும். அதற்காக பெரும் பாராட்டுகளையும் பெறுபவர் பார்த்திபன். அப்படி, இவரின் சமீபத்திய படைப்பு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.

சிங்கிள் ஹீரோ திரைப்படமாக ஒத்த செருப்பு வெளியானது. ஒரே அறைக்குள் படம் முழுக்க ஒரு நடிகர் மட்டுமே நடிக்க முழுப் படம் உருவாகியிருக்கும். பொதுவாக, இந்த மாதிரியான படங்களில் ஒரே முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் சலிப்புத் தட்டும். எந்த சலனமும் இல்லாமல் ரசிகர்களை இருக்கையில் அமரவைத்திருப்பார் நடிகர் பார்த்திபன்.

படத்துக்கு ஒளிப்பதிவினை ராம்ஜி மேற்கொள்ள, ஒலிக்கலவையை ரசூல்பூக்குட்டி மேற்கொண்டிருப்பார். அதோடு படத்துக்கான பாடலை சந்தோஷ் நாராயணனும், பின்னணி இசையை சத்யா மேற்கொண்டிருந்தனர்.

சிறந்த ஜூரி விருது மற்றும் சிறந்த ஆடியோகிராஃபி என இரண்டு தேசிய விருதுகளை படம் பெற்றது. தற்பொழுது, பாலிவுட்டுக்குச் செல்கிறது ஒத்த செருப்பு.

ஒத்தசெருப்பு பாலிவுட் ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். படத்தினை பார்த்திபன் இயக்குகிறார். அதோடு, தமிழில் பணியாற்றிய படக்குழுவே பாலிவுட் படத்துக்கும் பணியாற்றுகிறது. ஆனால், ஒரே ஒரு மாற்றம்.

பாலிவுட் சினிமாவுக்கு ஏற்ப படம் இருக்க வேண்டுமென்பதால், இசையமைப்பாளர் மட்டும் பாலிவுட்டிலிருந்து தேர்ந்தெடுக்க இருக்கிறார்களாம். அதோடு, படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

சமீபத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. அப்போது, ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட புகைப்படம் வைரலானது. அதே நேரத்தில் தான் அபிஷேக் பச்சனும் சென்னை வந்திருக்கிறார். ஒத்த செருப்புக்கான பாலிவுட் பட பணிகளையும் துவங்கியுள்ளாராம்.

பார்த்திபனின் அடுத்த முயற்சியான ஒன் ஷார்ட் திரைப்படமான ‘இரவின் நிழல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்துக்கான பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் முடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்த செருப்பு படத்தில் நடிப்பினால் ரசிகர்களை படத்துடன் பிணைத்து வைத்திருப்பார் பார்த்திபன். இவர் செய்த மேஜிக்கை அபிஷேக் பச்சன் நிகழ்த்துவாரா? பாலிவுட்டில் ஒத்த செருப்பு வாகை சூடுமா என்பதைப் பொருத்திருந்துப் பார்க்கலாம்.

**- ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *