இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published On:

| By Balaji

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று இருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் இரண்டாம்தர இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலன்கா 65 ரன்கள் அடித்தார். பந்து வீச்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஷ்குமார், சஹால் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து, 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் (53 ரன்கள்) தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

கடைசி கட்டத்தில் தீபக் சஹார் அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். அவருக்கு புவனேஷ்குமாரும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றியை ருசித்தது. 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை எட்டியது. தீபக் சஹார் 69-ரன்களிலும் புவனேஷ்குமார் 19-ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

**-ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share