இவ்வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அறியப்படும் ஓ மை கடவுளே, தெலுங்கை தொடர்ந்து இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது.
இவ்வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது ஓ மை கடவுளே. காதலர் தினத்தன்று காதலின் மகத்துவத்தை பொழுபோக்கு அம்சங்களோடு இளைஞர்களை கவரும் வகையில் சுவாரஸ்யமாக கூறியது இப்படம். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், திரையுலகப் பிரபலங்களும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இதனிடையே, இந்தப் படம் வெளியாகும் முன்பே இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியது. இப்படத்தையும் அஷ்வத் மாரிமுத்துவே இயக்கவுள்ளார். விரைவில் இதன் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், தற்போது ஓ மை கடவுளே இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக நேரலை ஒன்றில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசும்போது, நான் தற்போது ‘ஓ மை கடவுளே’ தெலுங்கு ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறேன். மேலும், இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. இவ்விரண்டும் தவிர்த்து தமிழில் அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”