ஆந்தையே டயட் பண்ணுது: நம்ம ‘நியூ இயர் சபதம்’ என்னாச்சு?

entertainment

உடல் எடையைக் குறைத்து கட்டுடல் மேனி கிடைக்க பலரும் போராடி வரும் நிலையில், ஆந்தை ஒன்றின் டயட் சிகிச்சை அனைவரையும் கவர்ந்துள்ளது.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், சில சத்துக்குறைபாட்டு நோய்கள் என்று தவிர்க்க முடியாத காரணங்களால் பலருக்கும் உடல் எடையில் மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய எதிர்பாராத காரணிகளால் ஏற்படும் உடல் எடை மாற்றத்திற்கு பலருக்கும் மருத்துவ உதவியும் தேவைப் படுகிறது. ஆனால், தேன் கிடைக்குமே என தேன் கூட்டில் கையை விட்டு அழுவது போன்று, என்ன பாதிப்பு ஏற்படும் என நன்கு தெரிந்திருந்தும், கட்டுப்பாடின்றி உணவு உண்கின்றனர். தேவையில்லாத உணவையும் தேடித் தேடி உண்டவர்கள் பின்னர் உடல் எடையைக் குறைக்க எளிய வழியைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கத்திலும் பெரும்பாலானவர்களின் சபதமாக, ‘உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்து விடுவேன்’ என்பது இருக்கிறது. ஆனால், ஜனவரி முதல் வாரம் நிரம்பி வழியும் உடற்பயிற்சி கூடங்கள் பிப்ரவரி இறுதியை நெருங்கும் போது வாகனம் இல்லாத வீதி போன்று வெறுமையாகிவிடுகிறது. ‘என்னால் முடியும்’ என தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்து, ‘என்னால் முடியுமா’ என்ற அவ நம்பிக்கையை எட்டும் போது உடற்பயிற்சியையும், உணவுக் கட்டுப்பாட்டையும் ஓரங்கட்டி விடுகின்றனர்.

இந்த நிலையில் தான், நம்பிக்கை இழந்த சிலருக்கும் நம்பிக்கை ஊட்டி நல்வழி கூறியுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த காட்டு ஆந்தை ஒன்று. இங்கிலாந்தில் அமைந்துள்ள ‘ஸஃபோக்’ என்னும் ஆந்தைகள் சரணாலயத்தின் உறுப்பினர்கள் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு ஆந்தையை மீட்டெடுத்தனர். அதற்கு ‘ப்ளம்ப்’ என்று பெயர் வைத்த ஊழியர்கள், ஆந்தை பறக்க முடியாமல் போனதற்கு அதன் உடல் எடை தான் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். வழக்கமான ஆந்தைகளை விடவும் மூன்று மடங்கு அதிக எடை கொண்ட அந்த ஆந்தைக்கு தீவிர உணவுக்கட்டுப்பாடு சிகிச்சை அளித்து அதன் எடையைக் குறைத்துள்ளனர்.

சுவாரஸ்யம் நிறைந்த இந்த செய்தி குறித்து ஸஃபோக் ஆந்தைகள் சரணாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது.

அந்தப்பதிவில், ‘பறக்க முடியாமல் இருந்த இந்த ஆந்தையை மீட்டெடுக்கும் போது, அதற்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்று தான் நினைத்தோம். ஆனால் எடை பரிசோதனையில், அதன் எடை 245 கிராம் என இருந்தது. உடலைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலங்களால் இந்த ஆந்தையால் பறக்கமுடியவில்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தது.

பொதுவாக விலங்குகளும் பறவைகளும் இத்தகைய உடல்பருமன் நோய்க்கு ஆளாவதில்லை. ஆனால் இந்த ஆந்தை அதிகப்படியான உணவை உட்கொண்டதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே அதிகளவில் வயல் எலிகள் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். கட்டுப்பாடு இல்லாமல் இரைகளை உண்டதால் இந்த நிலைக்கு இது ஆளாகியிருக்கிறது.

எங்களது கண்காணிப்பில் எங்களுடன் சில காலம் இருந்த இந்த ஆந்தைக்கு தீவிரமான உணவுக் கட்டுப்பாடு சிகிச்சை அளித்தோம். பெருமளவு உடல் எடையைக் குறைத்து சாதாரண நிலைக்கு இந்த ஆந்தை வந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.

ஒரு ஆந்தைக்கே உடல் எடையைக் குறைக்கவும், உணவைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்றால் நம்மாலும் முடியும் தானே.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *