கொரோனா வைரஸ் பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு டெஸ்டிங் பாசிட்டிவ்” என வந்ததாக நகைச்சுவையாக பதிவிட்ட நடிகர் ரோஹித் ராயை ரஜினிகாந்த் ரசிகர்கள் ‘ட்ரோல்’ செய்துவருகின்றனர்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ரோஹித் ராய். காபில், ஏக் கில்லாடி ஏக் ஹசீனா, அபார்ட்மென்ட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் பிரபல நடிகராக வலம் வருபவர். சமூக வலைதளங்களில் ‘ஆக்டிவாக’ இயங்கி வரும் இவர், அண்மையில் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதென்றும், பரிசோதனை முடிவில் ரஜினிக்கு பாசிட்டிவ் என வந்ததாகவும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “கொரோனாவுக்கான சோதனையில் ரஜினிகாந்துக்கு பாசிட்டிவ் என வந்தது. கொரோனா இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளது” என பதிவிட்டு நகைச்சுவையாக கூற முயன்றுள்ளார் ரோஹித். மேலும்,”கொரோனாவை வெளியேற்றுவோம் !! நீங்கள் மீண்டும் வேலைக்கு போகும்போது பாதுகாப்பாக இருங்கள்! உங்கள் முகமூடிகளை அணிந்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு பல முறை சேனிடைஸரை பயன்படுத்துங்கள். நாம் அதை அனுமதிக்காவிட்டால், வைரஸ் நம்மை பாதிக்காது” என பதிவிட்டார் ரோஹித்.
ஆனால், ரோஹித் நினைத்தபடி இந்த பதிவை நகைச்சுவையாக மட்டும் அவரது ரசிகர்களால் எடுக்க முடியவில்லை. பலரும் அவரை ‘ட்ரோல்’ செய்தும், விமர்சித்தும் வந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் இது வைரலாக துவங்கியவுடன், நடிகர், “நண்பர்களே … மிகவும் மோசமாக இருக்க வேண்டாம்! ஒரு நகைச்சுவை என்பது நகைச்சுவை மட்டுமே…மன்னிக்கவும். இது மோசமான வர்ணனை என்று நான் நினைக்கவில்லை. இது ஒரு பொதுவான ரஜினி சார் ஜோக் மட்டுமே. உங்களைப் புன்னகைக்கச் செய்வதே எனது நோக்கம். நீங்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்குவதற்கு முன் நான் சொல்ல வந்த அந்த நோக்கத்தைப் பாருங்கள். நீங்கள் எல்லோரும் என்னைப் புண்படுத்தும் விதமாக செய்திகளை இடுகையிடுவதைப் போல, உங்கள் அனைவரையும் காயப்படுத்த நான் இந்த நகைச்சுவையை முயற்சிக்கவில்லை” என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார் ரோஹித்.
வடஇந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் என்ற வகையே இருக்கிறது என கூறும் அளவிற்கு ரஜினிகாந்த்தை வைத்து பல ஜோக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘ரஜினியால் முடியாதது எதுவும் இல்லை’ என்ற தொனியில் இந்த நகைச்சுவை உருவாக்கப்படும். அந்த வகையில் ஒரு நகைச்சுவைக்கு முயன்ற ரோஹித், இந்த கொரோனா காலத்தின் தீவிரத்தை உணராமலும், அதிக ரசிகர்களை கொண்ட ஒரு நடிகருக்கு தொற்றுநோய் என்பது போல ஆபத்தான நகைச்சுவையை முயற்சித்ததும், அவருக்கே வினையாகிவிட்டது.
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,”