Oபாராட்டு மழையில் ‘ஓ மை டாக்’!

entertainment

திரையரங்குகளுக்கு குடும்பங்கள் அதிகமாக படம்பார்க்க வருவதற்கு குழந்தைகள் பிரதான காரணமாக இருப்பார்கள்.

குழந்தைகள், சிறுவர்களை கவர்ந்த கதாநாயகர்களின் படங்களுக்கு அதிகமான பார்வையாளர்கள் தியேட்டருக்கு வருவார்கள். ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் மூவரும் அந்தப்பட்டியலில் இன்றுவரை உள்ளனர்.

வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு என்றே படம் தயாரிக்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்படியான முயற்சிகள் இதுவரை இல்லை ,மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற மொழி மாற்றுப்படம்தான் குழந்தைகளுக்கான படமாக இங்கு வெளியானது. அதனை தொடர்ந்து 2007ல் “இனிமே நாங்கதான்” எனும் பெயரில் முழுக்க முழுக்க கிராபிக்சில் தயாரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது, இருந்தபோதிலும் அது போன்ற முயற்சிகள் தொடரவில்லை.

தற்போது 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா-ஜோதிகா இருவரும் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக குழந்தை நட்சத்திரத்தை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ள படம்தான் ‘ஓ மை டாக்’. இயக்குனர் சரோவ் சண்முகம் குழந்தைகளுக்காக என்றே இந்தக் கதையை உருவாக்கி அவர்களுக்கு எது பிடிக்கும் என்பதை மனதில் வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

தேவையற்ற பிரம்மாண்டங்கள் எதுவும் இல்லாமல் படமும் அதன் போக்கில் பயணிக்கிறது.
ஊட்டியில் வசிக்கும் சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவர் அருண் விஜய். மனைவி மகிமா நம்பியார், பள்ளியில் படிக்கும் மகன் ஆர்னவ் விஜய், அப்பா விஜயகுமார் ஆகியோருடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மகன் ஆர்னவ்வை கடன் வாங்கி சர்வதேசப் பள்ளியில் படிக்க வைக்கிறார்.

ஆர்னவ் பார்வையற்ற ஒரு நாயைத் தூக்கி வந்து ‘சிம்பா’ எனப் பெயர் வைத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். ஆர்னவ்வின் பயிற்சியால் சிம்பா நல்ல திறமையுடன் வளர்கிறது. அதற்கு பார்வை வரவழைத்து நாய் கண்காட்சியில் கலந்து கொள்ள வைக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளப் போகும் போது பணக்காரரான வினய், அவரது நாய் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சிம்பாவிற்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்.

அதை மீறி சிம்பா வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விஜயகுமார், அவரது மகன் அருண்விஜய், அவரது மகன் ஆர்ணவ் என மூன்று தலைமுறை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முதன்முறையாக நடித்திருக்கும் படம், பெரிய திருப்பங்கள், பரபரப்புகள் இல்லாத எளிமையான ஒரு படம்.

நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஆர்னவ் கதாபாத்திரம் மூலமாகவும், சிம்பா மூலமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். குழந்தைகளுக்கும், நாய்ப் பிரியர்களுக்கும் பிடிக்கும் இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் பாராட்டினைப்ப் பெற்று வருகிறது. அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில் “ஒரு செல்லப் பிராணியின் காதலனாக, இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார், அதில் “மிக்க நன்றி!! நான் ஜான்டி ரோட்ஸின் பெரிய ரசிகன்..! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்!!” என்று சூர்யா பதில் அளித்துள்ளார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன், இந்தப் படத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக இணைத்தது குறித்து தனது ஆச்சரியத்தையும், பாராட்டையும் விவரித்துள்ளார்.அதில் அவர் “இந்த திரைப்படத்தில் ஆர்ணவ்விஜய் நடிப்பை பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களை ஒன்றாக பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. அருண் விஜய் அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் இந்த கோடையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இணைத்து இப்படத்தை பார்த்து ரசிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் தன் டிவீட்டர் பக்கத்தில் “ஓ மை டாக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதைத் தவற விடாதீர்கள்!!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரசாந்த் சோலங்கியும் படத்தைப் பார்ப்பதற்கான தனது எதிர்பார்ப்பை குறித்து எழுதினார்.

“இந்தப் பாதங்களுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது. ‘ஓ மை டாக்’ பார்க்க ஆவலாக உள்ளேன்!” என்று குறிப்பிட்டுள்ளார் சோலங்கி. இந்த ‘ஓ மை டாக்’ படத்தினை ஜோதிகா-சூர்யா தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் எஸ்.ஆர்..ரமேஷ் பாபு இருவரும் ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

**-இராமானுஜம்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *