{ஆகஸ்ட் வரை சர்வதேசப் போட்டிகள் இல்லை: பிசிசிஐ

Published On:

| By Balaji

ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிசிசிஐ ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கான இந்திய சுற்றுப்பயணங்கள் ரத்துசெய்யப்பட்டன.

கொரோனாவின் பரவலானது உலகளவில் கிரிக்கெட் போட்டிகளின் கால அட்டவணையை சீர்குலைத்துள்ளது. அதே சமயம், இந்த ஆண்டு ஏதேனும் ஒரு கட்டத்தில் ஐபிஎல் நடத்த பிசிசிஐ கடுமையாக முயற்சிக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் மீண்டும் உயிர்ப்புடன் திரும்புவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதற்கான முனைப்பில் பிசிசிஐ இருப்பதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளிலும், டி 20 போட்டிகளிலும் கலந்து கொள்ள இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய முன்னரே திட்டமிட்டிருந்தது. வரும் ஜூன் 24 ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி இந்தப் போட்டிகள் நடந்திருக்கவேண்டும். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஜிம்பாப்வேக்கு செல்லவும் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் போட்டிகள் ரத்தாகியுள்ளது.

வாரிய செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவின் தற்போதைய அச்சுறுத்தல் காரணமாக முறையே ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திட்டமிடப்பட்ட இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் சுற்றுப்பயணங்கள் பிசிசிஐயால் நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவை அழைத்துப் போட்டிகள் நடத்துவதில் இன்னும் நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், பிசிசிஐ பகிரங்கங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிசிசிஐ ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு செய்திகளும் தெரிவித்திருந்தது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிசிசிஐ தனது அறிக்கையில் ஒப்பந்த வீரர்களுக்காக ஒரு முகாமை நடத்துவதாகவும், வெளியில் பயிற்சி செய்வது முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்போது மட்டுமே அதுவும் சாத்தியப்படும் என்று மீண்டும் வலியுறுத்தியது. மேலும், “சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிசிசிஐ உறுதியாக உள்ளது. ஆனால் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை பாதிக்கும் எந்தவொரு முடிவிலும் அது விரைந்து முடிவெடுக்காத நிலையில் உள்ளது” எனக் கூறியுள்ளது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share