கடைசி பஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நிக்குமா நிக்காதா? ‘என்கிற குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த குறும்படத்தில் நடிகர் ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை தமிழரசி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் ராம்குமார் பழனி, ‘சிரிக்கோ’ உதயகுமார் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கலையும், லிப் டு லிப் கிஸ்ஸையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த குறும்படத்தை கடைசி பஸ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.
இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகையில், “நிக்குமா நிக்காதா? என்ற தலைப்பு நன்றாக இருக்கிறது. குறும்படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டபோது விக்கலைப் பற்றியது என்றார். நம்முடைய பெரியோர்கள் விக்கலை நிறுத்துவதற்கு, ஆச்சரியமான விசயத்தை சொல்வார்கள். அதைக் கேட்டவுடன் விக்கல் நின்றுவிடும். ஆனால் இயக்குநர் கடைசி பஸ் கார்த்திக் விக்கலை நிறுத்துவதற்கு வித்தியாசமான மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார். முத்தம் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த குறும்படத்திற்கு என்னை நாயகனாக நடிக்க வாய்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நிக்குமா? நிக்காதா?. அமைதியாக இருந்த நாட்டில் திடீர் திடீரென்று மதக்கலவரங்கள் உருவாகிறதே. இது நிக்குமா நிக்காதா? அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் லஞ்சம் லாவண்யம் நிக்குமா? நிக்காதா.? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகளிடம் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம் மற்றும் அது தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படாமால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே. இந்த அக்கிரமம் நிக்குமா நிக்காதா?
நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள், மதிய வேளையில் நெய்வேலியிருந்து வலுக்கட்டாயமாக சென்னைக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். அந்தப் பயணத்தின் போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சித்தோ. ஜிஎஸ்டி குறித்தோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதுபோன்ற விவகாரங்கள் நிக்குமா நிக்காதா?.
கட்சியில் ரவுடிகளை சேர்த்துக் கொள்கிறீர்கள். இதனால் அராஜகம் உருவாகுமே. இந்தப் போக்கு நிக்குமா நிக்காதா?. 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே.. இது நிக்குமா நிக்காதா? பால்ய வயது சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நிக்குமா நிக்காதா?.
இதுபோன்ற நியாயமான கேள்விகளை எழுப்புவதால் இந்த படத்தின் தலைப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மலையாள சினிமாவில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்தால், அதில் கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு 20 முதல் 25 சதவீதம் தான் சம்பளம் தருவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 50 முதல் 60% சம்பளமாக தரவேண்டிய நிலை இருக்கிறது. எனவே குறும்படமான இந்தப் படத்தை திரைப்படமாக உருவாக்கும்போது முறையான திட்டமிடலுடன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் இன்று சினிமா பிசினஸ் என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒவ்வொரு படக்குழுவினரின் சாமர்த்தியத்தால் தான் வெற்றி பெற வேண்டியதிருக்கிறது.
இந்த குறும்படத்தில் நடித்திருக்கும் மறைந்த நடிகர் சிவராமனின் வாரிசு ஆதேஷ்பாலாவும், மற்றொரு நகைச்சுவை நடிகர் சந்திரன் பாபுவின் மகனான உதயகுமாரும் திரையுலகில் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்.
**-இராமானுஜம்**