அஜித் வீட்டில் சோதனையா? :வனத்துறை அதிகாரி விளக்கம்!

Published On:

| By Balaji

நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

திருவான்மியூரில் இருக்கும் நடிகர் அஜித்திற்கு சொந்தமான வீட்டில் மலைப்பாம்பு இருப்பதாக தகவல் வெளியானதாகவும், இதனைத் தொடர்ந்து அங்கு வனத்துறையினர் இன்று(டிசம்பர் 18) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது. நடிகர் அஜித்தின் செய்தித் தொடர்பாளராக வேலை செய்து வருபவர் சுரேஷ் சந்திரா. இவர் அஜித்தின் மேலாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

திருவான்மியூரில் இருக்கும் அஜித்திற்கு சொந்தமான வீட்டில் தற்போது அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் அவர் மூன்று அடி நீள மலைப்பாம்பு ஒன்றை வளர்ப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அந்த மலைப்பாம்பிற்கு அவர் வெள்ளை எலிகளை உணவாக அளிப்பதாகவும், அத்துடன் பல வெளிநாட்டுப்பறவைகளையும் வளர்த்துவருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்தத் தகவலில் அடிப்படையில் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்தி பொய்யானது என்று தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை வனத்துறை தலைமையிட வனச்சரகர் மோகன், ‘சமூக வலைதளங்களில் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திராவின் வீட்டில் பாம்பு வளர்க்கப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் அதுதொடர்பாக இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் இதுகுறித்து எவ்விதமான விசாரணையோ, வாரண்டோ பெறப்படவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share